மேலும் சில பக்கங்கள்

சாட்சியின் மீதி? த. அகிலன்

.









‘சிலுவை யேசுவைச் சிலந்தி சூழ்ந்தது
பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படர்ந்தது
மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன
சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் ஊர்ந்தன’

சுமார் பத்து வருடங்களிற்கு முன்பு, நான் கருணாகரனைச் சந்தித்த முதலாவது நாள். கருணாகரன் இடம்பெயர்ந்திருந்த அகதி வாழ்வின் கூடாரத்தில் வைத்து “ஹம்சத்வனி”யின்  இந்த வரிகளை என்னிடம் சொன்னார். ஏதோ சின்னப்பெடியன் முதல் கவிதையை அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன் என்ற காரணத்தினால்  அதையெல்லாம் மதித்து தன்னைச் சந்திக்கச் சொல்லியனுப்பி, சந்தித்த வேளையில் கவிதை குறித்தும், வாசிப்பின் திசைகள் குறித்த அறிமுகங்களையும் கொடுத்து, நிறையப் புத்தகங்களைத் தந்து, இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தி இப்படியாக அன்றிலிருந்து என்னுடைய வாழ்வின் மிகமுக்கியமான மனிதராக கருணாகரன் இருக்கிறார்.

உண்மையில் நான் இந்தக்கணம் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னை இந்தத் தொகுப்புக் குறித்துப் பேச அழைத்தமைக்காக கருணாகரனுக்கும் மெலிஞ்சி முத்தனுக்கும் என்னுடைய நன்றிகள். கவிஞர் கருணாகரனுக்கும் எனக்குமான உறவு ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு மாத்திரமல்ல. சக படைப்பாளிகளுக்கிடையிலான உறவும் கூட அல்ல. மகனுக்கும் தந்தைக்கும் போல, இரண்டு மெய்யான நண்பர்களுக்கிடையிலானதைப்போல, அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலானதைப் போன்ற ஒரு உறவு. இந்தத் தொகுப்பை படித்து முடித்ததும் கருணாகரனுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அண்ணை நீங்கள் என்னுடைய வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத பாத்திரம். பல நேரங்களில் பேரன்பையும் சில நேரங்களில் எரிச்சலையும் வரவழைக்கிற பாத்திரம்’ என்று. கருணாகரனிடம் மாத்திரம் தான் அன்பையும், எரிச்சலையும் வெளிப்படையாகவே காட்டலாம். அவர் எல்லோரையும் பேதமற்று நேசிக்கிற மனிதர்.


எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளர் இருந்தார். அவர் என்னுடைய எழுத்துக்களின் பால் ஈர்ப்புக் கொண்டவராகத் தொடர்ந்து உற்சாகமளிப்பார். அவர் கொழும்பிலிருக்கும்போது புலிகளைக் கடுமையாகத் திட்டிக்கொண்டிருந்தார். ஆனால் வெளிநாட்டுக்கு வந்தவுடன் புலிகளின் வெற்றிச் சங்குதான் தமிழர்களின் விடுதலை என்று தமிழ்ப் புலியாகினார். ஒரு தொலைபேசி உரையாடலில் நான் கேட்டேன். ‘இரண்டு தீர்வுதான் உங்களது நிலைப்பாட்டின் மாற்றத்திற்கு காரணமாக இருக்க முடியும். ஒன்று, புலிகள் தவறுகள் செய்து நீங்கள் வெளிநாடு வந்ததும் திருந்தியிருக்கவேண்டும். அல்லது நீங்கள் கொழும்பிலிருக்கும் போது தவறு செய்து வெளிநாடு வந்ததும் உங்களைத் திருத்தியிருக்க வேண்டும். எது நடந்தது?’ என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் ‘நீ ஒரு எழுத்தாளனே அல்ல’ என்பதாயிருந்தது. ஆனால் என்னைப் போலச் சிறியவனையும் மதித்து அவனுடைய கருத்துக்களையும் கேட்டு விமர்சனங்களை ஏற்று. பிழைகளைச் சகித்து, சரியைச் சொல்லித்தந்து தோழமையோடு அரவணைக்கிற கைகள் கருணாகரனுடையவை.

வன்னியில் இருந்து அவருக்கு பிறகு எழுத வந்தவர்கள் அவருக்கு முன்பாகவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் யாவரும் கருணாகரனோடு தொடர்புடையவர்களே. எப்போதும் படைப்பாளிக்கும், வாசகனுக்கும் திறந்தே இருக்கிற வீடு கருணாகரனுடையது. படிக்கப் புத்தகங்கள், பேச விசயங்கள், துயருக்கு ஆறுதல், பசிக்குச் சாப்பாடு எல்லாம் கிடைக்கும் அங்கே. அவருடைய வீட்டு முற்றத்தில் பிளாஸ்டிக் கதிரையைப் போட்டுக்கொண்டோ, கேற்றைப்பிடித்துத் தொங்கியபடியோ கதைத்துக் கொண்டே நின்றிருக்கிறோம் மணிக்கணக்காக.

இந்தத் தொகுப்பில் வரவேற்பு என்ற கவிதையில் கருணாகரன் இப்படி எழுதியிருக்கிறார்.
பார்க்கிறேன்
இலைகளில் கம்பளம் விரித்துக் காத்திருக்கின்றன
எல்லா மரங்களும்
பறவைகளுக்காக எப்போதும்.
பறவைகள் வந்தமர
எல்லாக் கிளைகளும் நெகிழ்ந்து கொடுக்கும்.
காதலும் நட்பும் அன்பும் கருணையும் பெருக
மலர்களும் கனிகளும் கூடப் பறவைகளுக்காகவே.
இப்படிச் செல்கிற அந்தக்கவிதை,  இப்படி முடியும்.
எந்தப் பறவை வந்தாலென்ன
விலகிச் சென்றாலென்ன
பறவைகளுக்காகவே காத்திருக்கின்றன
இலைக்கம்பளம் விரித்து ஒவ்வொரு மரமும்
இரவும் பகலும்.

என்னுடைய அனுபவத்தில் நான் கருணாகரனை பச்சைக் கம்பளம் விரித்த  மரமாகத்தான் பார்க்கிறேன். அதுதான் உண்மையாகவும் இருக்கும்.

கவிதையும் அரசியலும்
நான் நினைப்பது சரியென்றால். நான் பிறந்த போதிலிருந்து இன்று வரைக்கும் ஈழத்  தமிழ்க் கவிதையின் அரசியற் செயற்பாடென்பதும், அதன் பாடுபொருளும் ஒன்றுதான். ஈழத்தமிழர்களின் பிரச்சினையும் ஒன்றேதான். மரணத்துள் வாழ்வோமிலிருந்து தொடங்கி கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் வரையிலும் ஈழத்தமிழ்க்கவிதை சனங்களின் பாடுகளைச் சொல்லி அந்தரிக்கிறது. போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் பெருவாரியாக எழுந்த ஈழத்தமிழ்க்கவிதையின் தாக்கம் ஒட்டுமொத்தத் தமிழ்கவிதையின் பேசுபொருளையும் வடிவத்தையும் அசைத்தது. இன்றோ ஈழத் தமிழ் என்கிற பரப்பிலிருந்து தமிழ் என்கிற பெரும்பரப்பை வியாபித்து நிற்கிறது. அதே நேரம் மற்ற எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்திருப்பதைப்போல தமிழகத்து அங்கீகாரத்திற்கு ஏங்கிநிற்கும் ஓமணக்குட்டியாய் ஆகி நிற்கிறதோ என்றும் தோன்றுவதுண்டு.

ஈழக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளால் பதாதைகளும் ஊர்வலக் கோசங்களும் ஆக்கினார்கள். துவக்குளைக் தூக்க மனிதர்களை உந்தினார்கள், சில கவிஞர்கள் துவக்குகளையும் கூடத் தூக்கினார்கள், இன்னும் சிலர் கவிதை எழுதிய கையோடே ரவலிங் பாக்கைத் தூக்கினார்கள். இப்படியாக ஈழத்தமிழர்களோடு சேர்ந்து அவர்களது கவிதையும் காலத்தை பதிவு செய்தபடியே நகர்கிறது. அலைந்து அகதியாகி, சாவரங்கில் தவித்த சனங்களை போருக்குள் அமுக்கி, சாவுக்குத் தீனியாக்கி, கொள்ளிவைத்து, எட்டுச் செலவு செய்து, கல்வெட்டும் அடித்து பின்னும் ஈழத்தமிழ்க்கவிதை எழுதப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது. எழுதப்படவும் வேண்டும்.

ஈழத் தமிழ்க் கவிஞர் மற்றும் ஈழத்தமிழ்க் கவிதை என்கிற இந்தப் பொது வரையறைக்குள் இன்னமும் இலங்கையில் இருக்கிற, வன்னியில் இருக்கிற, கடந்த பதினெட்டு வருடமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற, யாழ்ப்பாணத்தில் இருக்கிற, வடக்குப் பகுதிக்கு வெளியேயிருக்கிற, முஸ்லிம்களாயிருக்கிற, புலம் பெயர்ந்திருக்கிற இப்படி ஏற இறங்கப் பார்த்தால் எக்கச்சக்கமான பிரிவுகள் இருக்கின்றன. இவையெல்லாமும் ஈழத்தமிழ்க்கவிதைகள் என்ற பொதுவெளிக்குள்ளும், இனமுரண்பாடு மற்றும் போர்ப் பின்னணி என்கிற பொது வெளிக்குள்ளும் வைத்தே அணுகப்படுகின்றன என்பது என்னுடைய அவதானம்.

அது உண்மையில் அநீதியானது. போர் தொடங்குவதற்கு முன்பாகவே  ரவலிங் பாக்கை தூக்கியவரின் அனுபவங்களும், ஒரு ‘சொப்பிங் பாக்’கோடு கலைக்கப்பட்டவரின் அனுபவங்களும், ஒரு ‘சந்திரிகா பாக்’கோடு முள்ளிவாய்க்கால் நீரேரியை நீந்திக்கடந்து சாவரங்கிலிருந்து தப்பி வந்தவரின் அனுபவங்களும் ஒன்றா?

அனுபவங்களை மனக்கண்ணால் கண்டு அல்லது தாய்மை உணர்வு பொங்க என்னதான் கவிதை எழுதினாலும் அதை இந்த மனிதர்களின் சொற்களுக்கு திருட்டுத்தனமாகத் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற முயற்சியாகத்தான் கருதவேண்டியிருக்கிறது. அவரவர் அவரவர் வகிபாகத்திற்குச் சாட்சியாயிருக்கலாம். அதுவே சரியானதும் நீதியானதுமாகும்.

கருணாகரன் ஒரு ‘பொழுதுக்காய்க் காத்திருத்தல்’ எழுதினார். எல்லோரைப்போலவும் அந்தப் பொழுது வருமென்று அவர் நம்பிய காலத்தில் அவர் வாழ்ந்த போது அச் சமகாலத்தின் சாட்சியமாய் அந்தத் தொகுப்பை அவர் கொண்டு வந்தார். பிறகு ‘ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புக்கள்’ எழுதினார். அது காத்திருத்தலின் தொடர்ச்சியாயும் காத்திருத்தலின் விளைவுகள் மீதான கேள்வியாயும் இருந்தது. பிறகு ‘பலியாடு’ காத்திருத்தலும் முடிந்து, விளைவுகள் பயங்கரமாகி பகலையும் இரவையும் கண்டு நான் அஞ்சுகிறேன் என்று தான் வாழ நேர்ந்த அக்காலத்தை  அவர் எழுதினார். காலப்பெருங்கடலை தனிப்படகில் கடக்க நேர்ந்த பயணியாய் அலையைச்சுழியை, அலைக்கழித்த காற்றை, கரைசேர்வோம் என்கிற நம்பிக்கையை பதிவு செய்கிற ஒரு பயணியாய் கருணாகரன் எப்போதுமிருக்கிறார்.

இப்போதும் இந்தத் தொகுப்பில், தான் கடந்து வந்த ‘சாவரங்கு’ பற்றி நாம் அனுபவித்திராத ஊழியைக் கடந்த பயணத்தை அவர் பதிவு செய்கிறார். அவர் எல்லாக் காலங்களிலும் தன்னைச் சாட்சியாகவே முன்னிறுத்துகிறார். சொல்ல முடிந்ததைச் சொல்லுகிற சாட்சியாக. ஆனால் கருணாகரனின் முதல் மூன்று  தொகுப்புக்களை ஏற்றுக்கொண்டமாதிரி. இந்தத் தொகுப்பை ஏற்றுக்கொள்ளவதில் பலருக்கும் உவப்பில்லை. கருணாகரன் மே 18 க்கு முன் அல்லது பின் என்கிற வகைமைக்குள் வைத்து வேண்டாத சாட்சியாக விலக்கிவைக்கப்படுகிறார்.

நாங்கள் சாட்சிகளை வேண்டி நிற்கிறோம், சாட்சியமளிக்கிறோம். ஆனால் எல்லாச் சாட்சியங்களையும் விரும்புகிறோமா என்றால் இல்லை. நாங்கள் உண்மையென்று நம்புகிறதைச் சொல்லவேண்டுமென்று சாட்சிகளிடம் எதிர்பார்க்கிறோம். அல்லது உண்மையின் ஒரு பகுதியை ஒழித்துவைக்கவேண்டுமென்று சாட்சிகளிடம் எதிர்பார்க்கிறோம். நிலாந்தன் முன்னுரையில் சொல்லுவதைப்போல ஒரு காலத்தில் உண்மைகளை உன்னத லட்சியம் ஒன்றிக்காக காத்திருத்தல் என்பதன் பெயரில் அடைகாத்தார்கள். இப்போது எந்த உன்னத லட்சியங்களும் கிடையாது. அடைகாத்த உண்மைகள் பாம்புகளாக மாறித் துரத்தத் தொடங்கிவிட்டன. அந்தப் பாம்புகள் யாரையும் விட்டுவைக்கப் போவதில்லை. அங்கேதான் கருணாகரன் தான் வரிசை குலைவதாகச் சொல்கிறார்.

‘வரிசை குலைதல்’ என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்.

என்னால் முடியவில்லை
வலிபெருகும் இந்த நிலத்தில்
சாட்சியாகவும் கொலையாளியாகவும் நிரபராதியாகவும்
முடிவற்றுக் கிழிபட்டுக் கொண்டிருக்க..

என்பதாக.

கருணாகரன் பொது வெளியில் முன்னர் உரத்துச் சொல்லமுடியாதவற்றைப் பேச முற்படுகிறார். ஆறாத காயங்களோடு தன் காலடியில் படுத்திருக்கும் வரலாற்றிடம் மன்னிப்பைக் கோருகிறார். ஒரு பாவமன்னிப்பாக, ஒரு மனந்திறந்த சாட்சியமாக அவற்றை முன்வைக்கிறார்.

போரின் குறுக்குவெட்டுத் தோற்றம் முழுமையானதாகக் கிடைக்கவில்லை என்பது இத்தொகுப்பின் மீது அல்லது கருணாகரன் மீது வைக்கப்படுகின்ற இன்னொரு பார்வை. கருணாகரன் இன்றைக்கும் வாழ்க்கின்ற நிலம் அப்படியானது. அது பேசவிடாத, எழுதவிடாத, உண்மைகளைப் பாதி விழுங்கப்பட்டபடி சொல்ல அனுமதிக்கிற ஆட்சியாளர்களின் நிலமாகத்தான் இருந்தது, இருக்கிறது. ஆனால் எனக்கு கருணாகரன் வாழநேர்கிற அதிகாரத்தின் நிழல் என்பது 2009 க்கு முன்னுக்கும் பின்னுக்கும் வௌ;வேறானதாகத் தெரியவில்லை. இரண்டு அதிகாரங்களும் ஒரே மாதிரியானவையே. குரல்களை அடக்குவதில், மக்களை ஆள்வதில், கட்டளைகளை நிறைவேற்றுவதில் என்று சனங்களின் மீது கருணையற்றுப் பாய்ந்து குதறும் ஒரே மாதிரியான அதிகார மையங்களாவே அவை இயங்கின, இயங்குகின்றன. மொழி, அங்கீகரிக்கப்பட்ட அரசு, ஒடுக்குகிற இனம் என்கிற நிபந்தனைகளைக் கழித்துப் பார்த்தால் கருணாகரனின் இறந்தகாலமும் நிகழ்காலமும் ஒரே வகையான அதிகாரத்தின் கீழ் வருகிறவையே.
சரி, போரின் முழுமையான குறுக்குவெட்டுத் தோற்றம் எனப்படுவது என்ன? மேற்குறித்த இரண்டு அதிகாரங்களையும் குறித்த பார்வை. இரண்டு தரப்பின் மீதான விமர்சனம். அப்படிப்பார்த்தால் இந்தத் தொகுப்பில் அது தாராளமாகவே இருக்கிறது. அவருடைய சொந்த வாழ்வின் உத்தரிப்புகள். மண்மூட்டையாக அடுக்கப்பட்டுத் தப்பித்தவர். புலிகளின் மீது விமர்சனம் கொண்டவர் என்பவை அவரது ஒட்டுமொத்த தொகுப்பையும் புலிகளின் குற்றங்கள் மீது எழுதப்பட்ட தூற்றுதலாக இருக்கக் கூடும் என்கிற அபிப்பிராம் ஏற்படுத்தலாம். திறந்த மனதோடு இந்த அபிப்பிராயங்களை விலக்கிக் கொண்டு வாசிக்கும் போது போரின் குறுக்குவெட்டுத் தோற்றம் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.

உதாரணமாக காலத்தைப் பின்னிழுத்துச் செல்லும் பாம்பு என்றொரு கவிதையில் அவர் இப்படி எழுதுகிறார்.

அது பாம்பென்பதால்
சிலபோது அது சீறியிருக்கிறது
சிலபோதோ அது படமெடுத்தாடியிருக்கிறது.
சிலபோது சிலரை அது தீண்டியுமிருக்கிறது
என்பதால் யாரும் அதனை விலக்கினார்கள்
பாம்புக்கு அஞ்சியே இருந்தனர் எல்லாரும்
பாம்பு தன்னகங்காரத்தின் தினவு கொண்டு
நகரத்தை தன் நிழலில் படுக்கவைத்தது
பாம்பின் விசமூறிய நகரத்தில்
தினமும் சனங்கள் செத்துக்கொண்டேயிருக்கிறார்கள்
காலம் பின்னகரப் பின்னகர
காற்றிலாடும் கொடியின் நிழலில்
அசைகிறது பாம்பின் உடலும்.
இந்தக் கவிதையில் கருணாகரன் குறிப்பிடுவது ஒரு தமிழ்ப்பாம்பா, அல்லது சிங்களப் பாம்பா? அல்லது இரண்டையுமா? எனக்கு அவர் இரண்டையும்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. அவர் தமிழ்ப்பாம்பை மட்டும்தான் சொல்கிறார் என்கிற முடிவுக்கு வந்தால், தமிழர்களிடம் பாம்பு இருக்கவில்லை என்பவர்களும், அது நல்ல பாம்பு என்று முனகுபவர்களும் மட்டும்தான் அப்படிச் சொல்ல முடியும். இப்படி இரண்டு அதிகாரமையங்கள் மீதும் கேள்விகளை வைக்கிற நிறையக் கவிதைகளை நான் இந்தத் தொகுப்பில் காண்கிறேன். (முழுமையாக இங்கே வாசித்துக்கொண்டிருந்தால் நேரத்தை பாம்பு விழுங்கும் என்பதால் சிலவற்றின் தலைப்புகளை மட்டும் சொல்கிறேன். நீங்கள் வாசித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்).
பலி
புதைசேறு
எதுவரை?
ஓயாக்கடல் உறங்கா நிலம் தீராக்கனவு…
முரண்
வலை
சாவரங்கு போன்ற கவிதைகள்

சரி, அப்படியானாலும் கருணாகரன் ஏன் யுத்தத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை முழுமையாகத் தராதவராக எமக்குத் தோன்றுகிறார். ஏனெனில் உண்மையில், நாங்கள் அவரிடம் ஒருபகுதி உண்மைகளை விழுங்கிவிடக் கோருகிறோம்.
இன்றைக்கிருக்கிற தமிழ்த்தேசியப் பொது வெளி, ‘வரிசை குலைந்தவர்களை’ ஏற்றுக்கொள்ளாதிருக்கிறது.  அது விரும்பாதவொரு சாட்சியமாகத்தான் கருணாகரன் கருதப்படுகிறார். மரணப் பொறியை நோக்கி மந்தைகளைப் போலச் சாய்த்துச் செல்லப்பட்ட மக்கள், தொடர்ந்தும் மந்தைகளாகவே நடந்து கொள்ளவேண்டுமென்று அது நிபந்தனைகள் விதிக்கிறது.

உண்மையில் ஒரு சாட்சி எதனைச் சொல்லவேண்டுமென்று யார் தீர்மானிப்பது. தமிழ்த் தேசியச் சூழலில் இன்றைக்கு நீதிமான்களின் தொகை மே 18க்கு பிறகு திடீரென்று அதிகரித்து விட்டது. மே 18க்கு முன்னர் பாவிகளாயிருந்தோர் புலிகளின் சிந்தனை முறையைத் தத்தெடுத்தபடி, புலிகளின் ஏகப்பிரதிநித்துவ நாற்காலியின் மீதான பேராசை உந்த, அதில் பாவங்களைக் கழுவிக்கொண்டதாய்க் கற்பனை பண்ணியபடி, தம் விருப்பப்படி பேசாத சாட்சியங்களை அவதூறென்னும் கழுவிலேற்றுகிறார்கள். ஆனால் இதில் ஒரு முரண் நகை என்னவெனில், இன்றைய புனிதர்கள் நேற்றைய பாவிகளாயிருந்தபோதும் கருணாகரன் அவர்களோ நட்பாயிருந்தார் என்பதும் திடீரென்று அவர்கள் புனிதர்களாகி கருணாகரனைப் பலிபீடத்துக்கு அனுப்பத் தயாராயிருக்கிறார்கள் என்பதும் தான்.

சனல் 4 வெளியிட்ட ஒரு சிறுமியின் புகைப்படம். உழவு இயந்திரப் பெட்டியில் துவக்கேந்திய ராணுவம் காவலிருக்க அந்தரித்து யாராவது வரமாட்டார்களா எனப் பதைபதைத்தபடி அமர்ந்திருக்கும் சிறுமிகளையும் உழவு இயந்திரத்துக்கு வெளியே ஒரு ரபர் பாண்டுக்குள் கூட அடக்காமுடியாதபடி ஒட்ட வெட்டப்பட்டிருக்கும் முடியை கஸ்டப்பட்டு ரபர் பாண்டுக்குள் போட்டபடி… குங்குமப் பொட்டொன்றை அழுத்த வைத்தபடி அந்தரிக்கும் ஒரு சிறுமியின் முகமும்.. இது உறுதியாக இனவாத சிங்கள அரசிற்கெதிரான போர்க்குற்ற ஆதாரம்தான். ஆனால் அந்தச் சாவரங்கிலிருந்து வந்த ஒருவர், அந்தச் சிறுமியின் தந்தையாகத் தன்னை உணர்கிற ஒருவரைப் பொறுத்த வரையில் அவரது சாட்சியம் அந்தச் சிறுமியின் தலைமயிரை வெட்டியவர்கள் யார் என்பதிலிருந்தே தொடங்குகிறது. குங்குமப் பொட்டை வைத்தவர்கள் யார் என்பதாகத் தொடர்ந்து இறுதியாய் உழவு இயந்திரத்தில் ஏற்றி என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை வந்தடையும்.  கெலம் மக்ரே வேண்டுமானால் உழவு இயந்திரத்திலிருந்து தனது கேள்வியைத் தொடங்கலாம். அது தன்னை நீதிமானாக அறிவித்துக்கொள்கிற அல்லது அப்படி நடிக்கிற, ஒரே கமராவினால் இரண்டு மணிநேர இடைவெளியில் எடுக்கப்பட்ட படங்களை இரண்டு வருட இடைவெளிகளில் வெளியிடுகிற, போருக்கு ஆயுதங்களை இரண்டு தரப்புக்கும் விற்று விட்டு நீதி விசாரணையையும் நடத்துவதாகப் பாவனை பண்ணுகிற உலகத்தின் குரல். ஆனால் ஒரு மனசாட்சியுள்ள ஒரு மனிதன். தமிழன்.  இனியும் தன்னைக் கொல்லத் துரத்தும் பாம்புக்குட்டிகளை அடைக்காக்க விரும்பாத சாட்சியம் நான் முதற் சொன்ன கேள்விகளிலிருந்தே தொடங்குவார்.

அதைத்தான் கருணாகரன் எழுதுகிறார் -

மனைவியின் தாலியைப் பிள்ளைக்கு அணிவித்தான் ஒரு தந்தை
பிள்ளையைக் காப்பதற்கும் போர்க்களத்தில் இருந்து அவளை மீட்பதற்குமாக.
ஒரு தாயாக, தந்தைக்கே மனைவியாகத் தோன்றினாள் மகள்.
யாருடையவோ பிள்ளையை ஏந்தித் தானே தாயென்றாள் ஒரு கன்னி
வழியில் வந்த முகமறியா ஒருவனோடு சேர்ந்திருந்தாள் ஒருத்தி
சாவரங்காகிய போர்க்களத்தில்
ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டேயிருந்தன.
தனித்திருந்த இளையோரெல்லாம் போருக்கே என்று நாட்டின் விதியுரைத்தபோது
இப்படி நாடகங்கள் ஆயிரம் உருவாகின.
உண்மையை விடவும் பொய் பெரும் கவசமாயிற்று அப்பொழுது.

இந்த உண்மை சிலருக்கு கோவத்தை ஏற்படுத்துகிறது. அந்தக் கோவத்தை சந்திக்க விரும்பாதவர்கள் கருணாகரனிடம் ‘சாவரங்கு’ குறித்த முழுமையான குறுக்குவெட்டுமுகம் கிடைக்கவில்லை என்று தீர்ப்பு எழுதி அவரை ஒரு தரப்பிற்குத் தள்ளிவிடுதல் நிம்மதியளிக்கிறது. இந்தத் துயரத்தை அடைகாத்து எதைச் சாதிக்கப்போகிறது இந்தச் சமூகம். தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லுவதற்கு இறைஞ்சும் நிலையைத்தான் சமகாலத் தமிழத்தேசியச் சூழல் கொண்டிருக்கிறது.

‘தூக்கு மேடையில் வைக்கப்பட்ட வாக்குமூலம்’ என்ற கவிதையில் கருணாகரன் எழுதுகிறார் -
எனக்குச் சாட்சியங்களில்லை
நிம்மதியுமில்லை
இதோ எனக்கான தூக்குமேடை
இதோ எனக்கான சவுக்கு
நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
உண்மையைக்கண்டறியுங்கள்
தயவுசெய்து கண்டறியுங்கள்
அதன்பிறகு
என்னைப்பலியிடுங்கள்
அதற்காக நான் மகிழ்வேன்
உண்மைக்காக என்னைப்பலியிடத் தயாராக இருக்கிறேன்.
அதுவரையில் நான் சாட்சியாக
இருக்க விரும்புகிறேன்
நல்ல நம்பிக்கைகளை
உங்களிடம் சொல்வேன்
எதுவும் பெரியதில்லை
எதுவும் சிறியதுமில்லை
நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை
எந்த விசமும் படர்ந்ததில்லை
என் நிழலில்.
உண்மையைக் கண்டவன்
அதைச் சொல்லாதிருப்பது
மாபெரும் பாவச் செயலாகுமல்லவா
தண்டனைக் குரிய தல்லவா
எனவேதான் உண்மையைச் சொன்னேன்
பாவங்களும் தண்டனையும்சேராதிருக்கும்படியாக
அதையே நான் செய்தேன்
அதையே நான் செய்தேன்
இதில் உங்களுக்குண்டா பேதங்கள்?
நான் உங்களில் ஒருவன்;
அன்பின் கூக்குரலை நான் ஒலித்தேன்
நாம் தோற்கடிக்கப்படலாமா
என்னைக் கோவிக்காதே என்னைக்கோவிக்காதே
நான் சொல்வதைக்கேளும்
நான் சொல்வதையும் கேளும்
உண்மைகளை நாம் ஒரு போதும் அழியவிடலாகாது
உண்மைக்குச் செய்யும் அவமானம்
நம்மைத் தூக்கு மரத்தில் நிறுத்தும்
நமது நாக்குக்கசக்கிறது
நமது கால்கள் வலிக்கின்றன
நமது வயிறு கொதிக்கிறது
என்ன செய்ய முடியும்
அவற்றுக்கு
மன்னிப்பா
ஆறுதலா
தண்டனையா?
காலத்திடம் சொல்லு
இன்னும் இன்னுமாய்…
புலிகளின் காலத்தில் துருத்திக் கொண்டு தெரிகிறவர்களில் ஒருவராயிருந்த கருணாகரன் இன்னும் துருத்திக் கொண்டு தெரிகிற ஒருவராகவே தொடர்ந்தும் இருக்க விரும்பாமையினாலேயே உண்மைகளைப் பேசுகிறார். அவர் இதுவரை காலமும் பேசாமல் விட்டதையோ, அல்லது உரக்கச் சொல்லாது மனசுக்கள் அடைகாத்ததையோ அவர் வெளியில் சொல்கிறார். கைதட்டல் ஓசைகளின்றி, வாசகர்களின் புகழ் மொழிக்கும், அறிவுஜீவிகளின் சகவாசத்துக்காகவும் சமகாலத்தில் தன் இடத்தைத் தக்க வைத்தல் என்பதற்காகவும் உண்மைகளை விழுங்கியபடி கடந்தகாலத்தைப் போல அடைகாக்கும் தொழில்நுட்பத்துக்குள் திரும்பவும் தன்னைப் பலியிடும் குருட்டுச் சாத்திரியாக இருப்பதற்கு அவர் தயாராயில்லை என்பதன் வெளிப்பாடுதான் இத்தொகுப்பு என நான் எண்ணுகிறேன். அப்படி 2009ல் கோவப்பட்டு, கோவத்தை குறைத்துக்கொண்டு சமகாலத்தில் தங்கள் இடத்தைத் தக்கவைக்கும் பிரயத்தனத்திலிருக்கும் ‘தீர்க்கதரிசிகள்’ மேலெழுகிற காலமாயும் இது இருக்கிறது. அப்படி உண்மைகளை விழுங்கிக்கொண்டு அல்லுலேயாக் கோசங்களை எழுப்பிக்கொண்டு பாம்புக் குட்டிகளை அடைகாக்கிறவர்களுக்குச் சொல்ல ஏதுமில்லை. ‘வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லை’ என்பதைத் தவிர.

ஆனால் வன்னியில் வாழ்ந்தவன் என்கிற அடிப்படையிலும் கருணாகரன், நிலாந்தன் போன்றவர்களை முன்மாதிரிகளாகக் கருதுவதில் பெருமையோடிருக்கிறவன் என்கிற அடிப்படையிலும் இத்தொகுப்பின் விடுபடலாக நான் கருதிகிற கோணம் ஒன்றுண்டு. கருணாகரன் இன்னொரு கோணத்திலும் இந்தக்காலத்தைப் பதிவு செய்தாகவேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒரு கவிஞராக, அரசியல் செயற்பாட்டாளராக, சமூகத்தின் அதிகார மையங்களோடு அடையாளப்பட்டிருந்த, அதிகாரங்கள் அற்றவகையிலெனினும் நெருக்கமாயிருந்த,  அவருடையதும் அவரைப் போன்றவர்களினதும் வகிபாகம் இந்தப் போர்க்காலத்தில் என்னவாயிருந்தது?
அதிகார மையங்களின் நெருக்கமாயிருந்தும், துருத்திக் கொண்டு தெரிகிறவர்களாயிருந்தும் உழவு இயந்திரத்துக்கு முன்னால் அந்தரித்து நிற்கும் சிறுமிகள் உருவாவதைத் தடுக்கமுடியாது போனது ஏன்? அல்லது அப்படியானவர்களின் உருவாக்கத்தில் உங்களுடைய பங்கு என்ன?  ‘பாவங்களால் நிரம்பிய ஒரு பாத்திரம் நான்’ என்று கருணாகரன் எழுதுகிறார். ஆற்றாமையின் பால் அவரைத் தள்ளும் அந்தப்பாவங்கள் என்ன? மெய்யான சாட்சியாளனாய் அந்த வகிபாகத்தையும் கருணாகரன் பதிவு செய்தாக வேண்டும். ‘நந்திக்கடலில் கழுவினாலும் போகாத இரத்தம் எங்கள் கரங்களில் இருக்கிறது’ என்று நிலாந்தன் சொல்லுகிறார். அந்த இரத்தம் யாருடையது? என்பதையும் அவர்கள் சொல்லவேண்டும். எப்படி அவர்களுடைய கைகளில் அது வந்தது என்பதையும்? அது எப்படி தவிர்க்கமுடியாததானது என்பதும் கூட வரலாற்றிற்கு அவசியமானவையே.

இது கருணாகரனின் முதல் தொகுப்புமல்ல, இறுதியானதுமல்ல. வாழ்வெனும் நெடும்பயணத்தில் அவர் தான் கடந்து வந்த காலத்தின் ஒரு துளியை இங்கே பதிவு செய்திருக்கிறார். எப்படி இந்தத் தொகுப்பில் தன் முதல் தொகுப்புகளில் தவிர்த்த முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பான கவிதையை பதிவு செய்திருக்கிறாரோ அதைப்போல இன்னும் இதிலும் பேசாத பேசமுடியாதவற்றையும் பதிலளிக்காது விட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பார். பயணியாய் அதையும் பதிவு செய்வார் என்றே நான் நம்புகிறேன். அதுதான் கருணாகரன் என்பதை நான் அறிந்தேயிருக்கிறேன்.

—————————————————————————————————————————–
(கனடாவில் 09.03.2013 அன்று நடந்த கருணாகரனின் ‘ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’ என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

Nantri: ethuvarai
Krishnamoorthi

No comments:

Post a Comment