| விஸ்வரூபம் |
| ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தமிழ் படத்தை தன்னால் இயக்க முடியும் என்று நிருபித்துள்ளார் கமல்ஹாசன். |
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை
விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தியுள்ளனர். நியூயார்க் நகரில்
பெண்மையும், மென்மையும் கலந்த விஸ்வநாதன் என்னும் கதக் நடனக் கலைஞரான
கமலிடமிருந்து விவாகரத்து பெற நினைக்கிறார் மனைவி பூஜாகுமார். இதற்காக
இவர் தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமிக்கிறார். தான் பணியாற்றும்
கம்பெனி முதலாளியுடன் நெருக்கம் அதிகமாவதால் இந்த ஏற்பாட்டை அமைப்பார்.நியமிக்கப்பட்ட துப்பறிவாளன் தவறுதலாக தீவிரவாதிகளின் தலைமறைவு பகுதிக்குள் நுழைந்து விட, அங்கு கொல்லப்படுகிறார். தங்களைத்தான் துப்பறிய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான் என்று கருதும் தீவிரவாதிகள் அனுப்பியவரைத் தேடிச் செல்ல விஸ்வநாதனும் அவர் மனைவி பூஜாவும் தீவிரவாதிகளின் பிடிக்குள் வருகிறார்கள். பிடிபட்ட கமலின் போட்டோ தீவிரவாத தலைவன் உமருக்கு அனுப்பப்படுகிறது. அதிர்ச்சி அடையும் அவர், ‘அவனை முட்டியில் சுட்டு நான் வரும் வரை உயிரோடு வைத்திருங்கள்’ என்று கட்டளை இடுகிறார். உமர் வந்து சேர்வதற்குள் கமல் நடத்தும் விஸ்வரூப தாண்டவம்தான் படம். ‘என் ஆத்துக்காரிக்கு சிக்கன் பிடிக்கும், எனக்கு ஆத்துக்காரிய பிடிக்கும். அதான் சமைக்கிறேன்’ என்கிற அப்பாவி கதக் நடனக்கலைஞராக விஸ்வநாதன். ‘அப்பனைத்
தெரியாத பிள்ளைங்க திமிராத்தான் வளரும், உன்ன மாதிரி’ என்று உமர் சொல்ல,
‘அப்பன் யாருன்னே தெரியாம வளர்ற பிள்ளைங்க ரொம்ப திமிரா வளருமோ உங்கள
மாதிரி’ என்று அவரையே மடக்கும் ஜிகாதி.‘நானோ உமரோ சாகிற வரைக்கும் இந்த கதை முடியாது’ என்று கர்ஜிக்கும் ரா உளவாளி என்று கமலின் ஒவ்வொரு அவதாரமும் அசத்தல். ஆக்ரோஷ சண்டையிலும், ஆனந்த நடனத்திலும் மிரட்டல். ‘கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று பூஜா சொல்லும்போது, ‘எந்த கடவுள்?’ என்கிற போதும், ‘எங்க கடவுளுக்கு 4 கைகள்’ என்று பூஜா சொல்ல, பெண் அதிகாரி ‘அவரை எப்படி சிலுவையில அடிப்பீங்க?’ என்று கேட்க, ‘கடல்ல போட்டுருவோம்’ என்று பூஜா சொல்வதும் கமல் பிராண்ட் நையாண்டிகள். நடிகராக மட்டுமல்ல, இயக்குனராகவும் தன்னை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார் கமல். ஆப்கான் கிராமம், அதில் ஜிகாதிகளின் வாழ்க்கை முறை, படிக்கத் துடிக்கும் தீவிரவாதிகளின் பிள்ளைகள், படிக்கவும், சிந்திக்கவும் முனைபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் என்று இதுவரை ஊடகங்களில் படித்தவற்றையும், பார்த்தவற்றையும் கண்முன்னே நிகழ்த்தி காட்டும்போது மனது பதறுகிறது. அதனால்தான் ஆரம்பத்திலேயே இளகிய மனதுடையவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். நியூயார்க்கில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல். எதற்கும்
உதவாத கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தன் முதலாளியை திருமணம் செய்ய
துடிக்கும் கதாபாத்திரத்தில் பூஜா. அக்ரகார தமிழ் பேசி அசைவம் சாப்பிடும்
கதாபாத்திரம். கமலின் ஆக்ஷன் ரூபத்தை கண்டு மிரளும் காட்சியில் கண்களிலேயே
நடித்திருப்பது அருமை.ஆண்ட்ரியாவுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் கமலின் தளபதியாக வந்து கைதட்டல் வாங்குகிறார். கமலின் உயரதிகாரியாக சேகர் கபூர் கச்சிதம். இறந்த நண்பனின் உடலை பார்த்து விட்டு பிரஷர் மாத்திரை போட்டு ‘நண்பன் செத்த அதிர்ச்சியில ஹார்ட் அட்டாக் வந்து நானும் செத்துடக்கூடாதில்ல நிறைய வேலை இருக்கே’ என்று சொல்லும் காட்சி ஒரு சோறு பதம். உமர் குரோஷியாக நடித்திருக்கும் ராகுல் போஸ்தான் கமலுக்கு அடுத்த இடத்தை பிடிக்கிறார். ஒவ்வொரு வார்த்தையிலும், அசைவிலும் வில்லத்தனம். மிடுக்காக இருக்கும்போதும், தளர்ந்தபோதும் அந்த வில்லத்தனத்தை மட்டும் தக்க வைத்துக் கொள்வது பிரமாதம். நாசராக வரும் நாசர், சலீமாக நடித்திருக்கும் ஜெய்தீப் அஹ்லாவத் உட்பட அனைவருமே பாத்திரத்துக்கேற்ற தெரிவு. பாடல்களில்
ஆக்ரோஷமும் இருக்கிறது. ஆரோகணமும் இருக்கிறது. பின்னணி இசையில்
மிரட்டுகிறார்கள், தலைக்குமேல் பறக்கும் ஹெலிகொப்டரின் சத்தம், திரையில்
வெடிக்கும் துப்பாக்கி குண்டுகள் பக்கத்தில் விழுவது போல பதற வைப்பது என்று
தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள்.ஷானு ஜான் வர்க்கீஸின் ஒளிப்பதிவில் அமெரிக்க அழகும் ஆப்கான் பரப்பும் மனதில் நிறைகிறது. கலை இயக்குனர் இளையராஜாவின் கலையில் எது நிஜம் எது செட் என்பது தெரியவில்லை. சில காட்சிகளின் வசனங்கள் மவுனிக்கப்பட்டிருந்தாலும் அவை எதுவும் கதையை பாதிக்காதவாறு கவனமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் கமல். வில்லனை கொல்லவில்லையே என்ற குறை இருந்தாலும் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பை படத்திலேயே சொல்லியிருப்பதில் அந்த குறையும் மறைந்து விடுகிறது. |
| நன்றி விடுப்பு |
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 01/12/2025 - 07/12/ 2025 தமிழ் 16 முரசு 32 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
இதற்காக
இவர் தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமிக்கிறார். தான் பணியாற்றும்
கம்பெனி முதலாளியுடன் நெருக்கம் அதிகமாவதால் இந்த ஏற்பாட்டை அமைப்பார்.
‘அப்பனைத்
தெரியாத பிள்ளைங்க திமிராத்தான் வளரும், உன்ன மாதிரி’ என்று உமர் சொல்ல,
‘அப்பன் யாருன்னே தெரியாம வளர்ற பிள்ளைங்க ரொம்ப திமிரா வளருமோ உங்கள
மாதிரி’ என்று அவரையே மடக்கும் ஜிகாதி.
எதற்கும்
உதவாத கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தன் முதலாளியை திருமணம் செய்ய
துடிக்கும் கதாபாத்திரத்தில் பூஜா. அக்ரகார தமிழ் பேசி அசைவம் சாப்பிடும்
கதாபாத்திரம். கமலின் ஆக்ஷன் ரூபத்தை கண்டு மிரளும் காட்சியில் கண்களிலேயே
நடித்திருப்பது அருமை.
பாடல்களில்
ஆக்ரோஷமும் இருக்கிறது. ஆரோகணமும் இருக்கிறது. பின்னணி இசையில்
மிரட்டுகிறார்கள், தலைக்குமேல் பறக்கும் ஹெலிகொப்டரின் சத்தம், திரையில்
வெடிக்கும் துப்பாக்கி குண்டுகள் பக்கத்தில் விழுவது போல பதற வைப்பது என்று
தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment