கடல் |
![]() |
பாதிரியார் பயிற்சி பள்ளிக்கு பாதிரியராக
சேவை புரிய பயிற்சி எடுக்க வரும் அரவிந்த்சாமி, அந்த பள்ளியில் தன் குடும்ப
வறுமை காரணமாக சற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் பாதிரியாராக பயிற்சி
எடுத்து வரும் அர்ஜுனை சந்திக்கிறார்.![]() இந்நிலையில், ஒரு பெண்ணுடன் அர்ஜுன் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிட்ட அரவிந்த்சாமி தலைமை பாதிரியாரிடம் அதை தெரிவித்து விடுகிறார். ஆத்திரத்தில் அரவிந்த் சாமியை கொன்றுவிட நினைக்கும் அர்ஜுன் பாவத்தின் வேதனையை அரவிந்த்சாமி அனுபவிக்க வேண்டும் என்றுகூறி அவரை விட்டுவிடுகிறார். தப்பு செய்ததற்கு பிரயாச்சித்தமாக அந்த பயிற்சி பள்ளியை விட்டு வெளியேறுகிறார் அர்ஜுன். சில வருடங்கள் கழிகிறது. நாகர்கோவில் அருகே ஒரு கடற்கரை கிராமத்தில் விலைமாது என்ற பட்டத்துடன் ஒரு பெண் இறந்து போகிறாள். அவளது குழந்தையை அந்த கிராமமே அனாதை, விலைமாது மகன் என்று கூறி உதாசீனப்படுத்துகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் ஆலயத்திற்கு பாதிரியராக வரும் அரவிந்த்சாமி, கடவுள் பற்று இல்லாத கிராம மக்களுக்கு கடவுள் நம்பிக்கை அளிக்கிறார். குப்பைக் கிடங்காக காட்சியளிக்கும் ஆலயத்தை சுத்தம்செய்து புனித இடமாக மாற்றுகிறார். சில நாட்களில் பாதிரியாரின் நடவடிக்கைகள் கிராம மக்களுக்கு பிடித்துப்போகவே அவரை சாமியாராக ஏற்றுக்கொள்கிறார்கள். அனாதையாக சுற்றித்திரியும் நாயகனுக்கும் முதலில் பாதிரியார் மீது கோபம் வருகிறது. அதன்பின் அரவிந்த்சாமி சில அறிவுரைகளை கூறும்போது அதை அவன் ஏற்று நல்லவனாக மாறுகிறான். பின், அரவிந்த்சாமியே அவனை மீன்பிடித் தொழிலில் சேர்த்துவிட்டு பெரியவனாக்குகிறார். ![]() அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நெருக்கமாக பழக, குழந்தைத் தனத்துடன் வெகுளியாக பேசும் துளசியின் பேச்சில் மயங்கும் கௌதம் அவளை ஒருதலையாக காதலிக்கிறான். ஒருநாள், கிராமத்துக் கடற்கரையில் குண்டு பாய்ந்து கிடக்கும் அர்ஜுனுக்கு, யாருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணுடன் இணைந்து அரவிந்த் சாமி சிகிச்சை செய்கிறார். ஆனால் உதவி செய்த அரவிந்த் சாமிக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரை அவமானப்படுத்தி சிறைக்கு செல்ல வைக்கிறார் அர்ஜுன். ஆதரவாக இருந்த பாதிரியார் சிறைக்கு சென்றதற்கு கிராம மக்கள்தான் காரணம் என்று அவர்களிடம் சண்டைக்கு போகிறான் கௌதம் கார்த்திக். இறுதியில், அவனை அடித்து தூக்கிப் போடுகிறார்கள் கிராம மக்கள். அதன்பின், அர்ஜுன் முன் நிறுத்தப்படும் கௌதம் கார்த்திக் தனக்கு ஆதரவாக யாருமே இல்லாத பட்சத்தில் அர்ஜுனனிடமே சேருகிறான். ![]() இறுதியில், அர்ஜுன் என்ற சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கௌதம் அதிலிருந்து விடுபட்டனா? ஜெயிலுக்கு போன அரவிந்த்சாமி என்ன ஆனார்? கௌதம்- துளசி காதல் என்னவாயிற்று என்பதே மீதிக் கதை. நீண்ட இடைவெளிக்குப் பின்பு சினிமாவில் மறுபிரவேசம் எடுத்திருக்கும் அரவிந்த்சாமிக்கு, இந்த படத்தில் தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடுகிற கதாபாத்திரம்தான். அதையும் சரியாக, கனகச்சிதமாக செய்திருக்கிறார். இன்னும் சிரிப்பில் வசீகரத்தை அள்ளி வைத்திருக்கிறார். மேஜைக்காராக அர்ஜுன், பாவம் என்ற வழியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற கதாபாத்திரம், கண்ணில் உக்கிரம், உதடுகளில் ஆக்ரோஷமான பேச்சு என்று மிரட்டியிருக்கிறார். அழகாக இருக்கும் கௌதம் கார்த்திக் காதல், சண்டை, ஆட்டம் என்று இளமை துடிப்புடன் மிடுக்கான தோற்றத்தில் இருந்தாலும் சுமாரான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ![]() இயக்குனர் மணிரத்னம் படங்களிலேயே சற்று வித்தியாசமான படமாக இப்படம் வெளிவந்திருக்கிறது. வட்டார வழக்கு மொழியை படம் முழுவதும் நேர்த்தியாக கையாண்டு, கடைசிவரை கொண்டுபோய் கரை சேர்த்திருக்கிறார். ஆனால், இவருடைய படங்களுக்கே உரித்தான ஒரு வரி வசனங்கள், நெஞ்சைத் தொடும் காட்சிகள் இப்படத்தில் மிஸ்ஸிங். நீண்ட இடைவெளிக்குப் பின்பு தமிழில் நேரடியாக படம் எடுத்ததால், கொஞ்சம் திணறியிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தவில்லை. ராஜீவன் ஒளிப்பதிவுதான் இப்படத்தின் மிகப்பெரிய பலம், படத்தின் கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறார். மீனவ கிராமம், பாழடைந்த ஆலயம் என்று எல்லாவற்றையும் தன் கமெரா கண்களால் அழகாக காட்டியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருந்தன. ஆனால், அதை எப்படி காட்சிப்படுத்தப் போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. அதை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக, ‘மூங்கில் தோட்டம்’, ‘ஏலே கீச்சான்’ ஆகிய பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் ரசனை. மொத்தத்தில் கடல் அழகு, ஆழமில்லை. நடிகர் : கௌதம் நடிகை : துளசி நாயர் இயக்குனர் : மணிரத்னம் இசை : ஏ.ஆர்.ரகுமான் ஓளிப்பதிவு : ராஜீவ் மேனன் நன்றி விடுப்பு |
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
▼
No comments:
Post a Comment