6/1/2012
சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சச்சின் டோனியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி அபாரமாக துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 659 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. பொண்டிங் 134 ஓட்டங்களையும் அணித் தலைவர் கிளார்க் 329 ஓட்டங்களையும் ஹஸ்ஸி 150 ஓட்டங்களையும் எடுத்தனர்.
468 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடியது. நேற்று 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை எடுத்திருந்தது. கம்பீர் 68 ஓட்டங்களுடனும் சச்சின் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 168 ஓட்டங்கள் எடுப்பதற்குள் கம்பீர் விக்கெட்டை பறிகொடுத்தார். 83 ஓட்டங்கள் எடுத்திருந்த கம்பீர் சிடில் பந்தில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து சச்சினுடன் இணை சேர்ந்த லஷ்மண் அபாரமாக துடுப்பெடுத்தாடி அரைச்சதத்தை பெற்றார்.
தொடர்ந்து சதங்களை எட்டும் வாய்ப்பை தவறவிட்டு வந்த சச்சின் இந்த டெஸ்ட்டிலும் சதம் அடிக்க தவறி விட்டார். 80 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கிளார்க் பந்தில் சச்சின் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து லஷ்மண் 66 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் டோனி 2 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.
பின்னர் இணை சேர்ந்த பந்துவீச்சாளர்களான அஸ்வின் - சகீர்கான் ஆகியோர் சற்று அபாரமாக துடுப்பெடுத்தாடிய போதும் சகீர்கான் 26 பந்தில் 35 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் ஒரு சிக்சர் 5 பவுண்டரிகள் அடங்கும்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் அஸ்வின் அதிரடியாக விளையாடி அரை சதத்தை கடந்து 62 ஓட்டங்களில் ஹில்பென்ஹவுஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதனால் இந்திய அணி 400 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரு இன்னிங்சில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
அவுஸ்திரேலிய வீரர் ஹில்பென்ஹவுஸ் அபாரமாக பந்து வீச்சி சச்சின், சேவாக், லஷ்மண், டோனி, அஸ்வின் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.
நன்றி வீரகேசரி
எங்கன்ட பெடியள் கலக்கி போட்டாங்கள்...ஒசி ஒசி ...ஒய் ஒய்...
ReplyDelete