மேலும் சில பக்கங்கள்

இலங்கைச் செய்திகள்

.
1. யாழ். குடாநாட்டில் கடந்த வருடம் 251விடலைப் பருவ கர்ப்பங்கள் : அரச அதிபர்
2. யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் கணவனால் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டுள்ளார்
3. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முன்னேற்றமடையச் செய்வேன்

4. மட்டக்களப்பு சமூக ஒழுங்மைப்பு: கா.சிவத்தம்பி பார்வையில்

5. வன்னி திரும்பிய முதியவர்கள் பலர் வறுமை,தனிமையால் பரிதவிப்பு உதவ நிதி இல்லையெனக் கை விரிக்கும் தொண்டர் அமைப்புக்கள்

6. யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு மாற்றம்

7.இலக்கியப் பேரவையின் விருது பெறும் நூல்களின் விவரங்கள் வெளியாகின

1. யாழ். குடாநாட்டில் கடந்த வருடம் 251விடலைப் பருவ கர்ப்பங்கள் : அரச அதிபர்


யாழ். குடாநாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு மட்டும் 251 சிறுவர்கள் விடலைப் பருவ (பதின்மர் பருவ) கர்ப்பம் தரித்தவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ். மாவட்டத்தில் இருந்த 194,451 மொத்த சிறுவர்களில் தாய், தந்தையை இழந்த சிறுவர்கள் 437 பேரும், தந்தையை மட்டும் இழந்த சிறுவர்கள் 6,321 பேரும், பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்கள் 489 பேரும் உள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட 163 பேரும், பயங்கரவாத நடவடிக்கைகளினால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் 990 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட 272 சிறார்களும், மாற்று வலுவுடைய சிறுவர்கள் 417 பேரும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



 349 சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 349 சிறுவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதத்தில் மட்டும் 40 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளதுடன், விடலைப் பருவ கர்ப்பம் தரித்தவர்களாக 109 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்

நன்றி தேனீ 

2. யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் கணவனால் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணப் பெண்ணொருவர் தனது கணவனால் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 ம் திகதி  மாலை யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவர் ஒருவரே தன் மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான 25 வயதுடைய பெண்ணொருவரே அவ்வாறு கொளுத்தப்பட்டுள்ளார்.

அவரது அலறல் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் ஆபத்தான நிலையில் அவரை யாழ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்பெண்ணைக் கொளுத்திய கணவர் தலைமறைவாகியுள்ளார்.

குருநகர் பொலிசார் அவரைத் தேடி வருவதுடன், மேலதிக பொலிஸ் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

நன்றி தமிழ்வின்

3.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முன்னேற்றமடையச் செய்வேன்




- புதிய துணைவேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சகல துறைக் கல்விச் செயற்பாடுகளையும் அனைவரினது ஒத்துழைப்புடன் முன்னேற்றமடையச் செய்வதே தனது நோக்கமாயுள்ளதாக புதிய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்கும்வைபவத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது கல்வித்தகைமையைப் பற்றி பலர் பலவாறு கூறுகின்றனர்.ஆனால்,எமது ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவோமாயிருந்தால் மாணவர்களது தகைமை முன்னேற்றமடையும்.இவ்வாறான விடயங்களையே நாங்கள் முதன்மையாக கருத்தில் கொள்ள வேண்டும்.இதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழக சுற்றாடல் மற்றும் வளாகக் கட்டிடங்கள் என்பவற்றில் பெரும்பாலானவர்களுக்கு விருப்பம் இல்லை.எனவே அவையும் திருத்தியமைக்கப்பட வேண்டும்.

நான் இந்தப் பதவிக்கு வந்தவுடன் அனேகமானவர்களது பாராட்டுகளுடன் பல வேண்டுகோள்களும் வந்துள்ளன. இவ்வளவு காலமும் பிரச்சினைகளை எதிர்நோக்கி பிரச்சினைகளைத்தான் தீர்வாகக் கண்டு கொண்டுள்ளோம்.இனிவரும் காலங்களில் உயர்வை நோக்கிப் போகின்ற வழியை யோசிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.

பதவியேற்பு வைபவத்தை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற ஒருசில சிறு தவறுகளை வைத்துக் கொண்டு பெரிதாக செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

பெண்களால் செய்ய முடியாத விடயம் என்று ஒன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை பெண் என்று எந்த சந்தர்ப்பத்திலும் பின் நின்றது இல்லை.

அதற்காக ஆண்களால் செய்ய முடியாது என்று சொல்லவில்லை.பெண்களாலும் செய்ய முடியுமென்றார்.


4. மட்டக்களப்பு சமூக ஒழுங்மைப்பு: கா.சிவத்தம்பி பார்வையில்


இப்பொழுதுள்ள கிழக்கு மாகாணப் பிரதேசமானது, பொதுவாக “மட்டக்களப்புச் சமூகம்” என்று குறிப்பிடப்படுவதாகும்.

மட்டக்களப்புச் சமூக அமைப்பு, குறிப்பாக அதன் சமூக ஒழுங்கமைப்பிலும் (Social Organizations), சாதியமைப்பிலும், யாழ்ப்பாணத்தில் நிலவும் முறைமையிலிருந்து நிதர்சனமான வேறுபாடுகளைக் கொண்டது.

வரலாற்று ரீதியாக இது நீண்டகாலம் கண்டியர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுய ஆதிக்கமுள்ள பிரதானிகள் இருந்துவந்தனர் என்ற அபிப்பிராயம் உண்டு.

இங்குள்ள “குடி” முறைமை முக்கியமானதாகும். ஒவ்வொரு சாதிக்கும் பல்வேறு குடிகள் உண்டு. அக்குடிகள் புற மண குழுமங்களாகும் (Exogamons). [குடிமுறைமை யாழ்ப்பாணச் சமூக அமைப்பிலும் ஒரு காலத்தில் நிலவி இருத்தல் வேண்டும். அங்கு "குடி", "பகுதி" என்பன வம்சவழியினைக் (Lineage) குறிப்பவை.] மட்டக்களப்பில் குடிமுறைமை, கோயில் ஆதிக்கம் போன்றவற்றால் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள இந்து சமய முறைமை, யாழ்ப்பாணத்தில் நாவலருக்குப் பின் ஏற்பட்டதுபோன்று “அடுக்கமைவுபூர்வமாக வரன்முறைப்படுத்தப்பட்ட ஒன்று” அன்று. இதனால் மட்டக்களப்பில், “முக்குவர்” நில ஆதிக்க முதன்மை நிலையுடையோராய் விளங்கினாலும், அவர்களுக்கு (யாழ்ப்பாணத்தில் வெள்ளாளருக்கு உள்ளது போன்று) சடங்காச்சார முதன்மை” (Ritual Supremacy) இல்லை. வெள்ளாளர், சீர்பாதக்காரர் ஆகியோரும் தத்தம் முக்கியத்துவத்தினை வற்புறுத்துவர்.

மட்டக்களப்பின் புவியியற் கூறுகள் காரணமாக அதன் உணவுமுறைகள் தனித்துவமானவை.

மத ஒழுகு முறையில், சமஸ்கிருதமையப்பாடு கிடையாது. இதனால், “ஆகம” முறை முதன்மை அங்கு இல்லை. கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈசுவரர் கோயில் வீரசைவ மரபின்படியே கோயிலொழுகு முறையைக் கொண்டது.

மட்டக்களப்பின் கவனிக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சம் அது சோழ ஆட்சியின் ஒரு கூறாக அமைந்திருந்தது என்பதாகும். இதனால் பொலநறுவை – மட்டக்களப்பு – மூதூர் – திருகோணமலை ஆகிய பிரதேசங்களினனூடே ஓர் ஒருமைப்பாடு நிலவியிருத்தல் வேண்டும். இந்த ஒரு நிலைப்பாட்டின் எச்ச சொச்சங்களாக இப்பகுதிகளில் இப்பொழுது காணப்படும் சிவன் கோயில்கள் உள்ளன. இவ்வமிசம் இன்னும் நன்றாக ஆராயப்படவில்லை. (த.சிவராம் தமது சில கட்டுரைகளில் இவ்வமிசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளார். இது பற்றி முதன் முதலில் புலமைச்சிரத்தையினை ஏற்படுத்தியவர் அவரே).

மட்டக்களப்பில் முக்குவச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக முக்கியமானதெனினும் இப்பொழுது அது வழக்கில் இல்லை.

மட்டக்களப்புப் பிரதேசத்தின் மிகப் பிரதானமான சனவேற்ற (demographic) அமிசம், அது பாரம்பரிய முஸ்லிம் வாழிடங்களைக் கொண்டது என்பதாகும். இந்த முஸ்லிம்கள் மொழியாலும் (தமிழ்), சமூக ஒழுங்கமைப்பு முறையாலும் (குடிமுறைமை), தமிழரோடு இணைந்தவர்கள். சில நில ஆட்சியிலும் நிறையப் பொதுமை உண்டு.

இங்குள்ள முஸ்லிம்கள் விவசாயத்தை தளமாகக்கொண்டவர்களாதலால், இவர்கள் தமிழர்களிலிருந்து பிரிக்கப்படமுடியாதவர்கள்.

இங்கு தமிழ் – முஸ்லிம் சகசீவனம் என்பது இருபகுதியினரது தனித்துவங்களையும் உரிமைகளையும் கணக்கெடுப்பதிலும், ஒற்றுமையான வாழ்வு ஒழுங்குமுறையை வகுத்துக் கொள்வதிலும் தங்கியுள்ளது.

இப்பிரதேசத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை.

திருகோணமலை

மட்டக்களப்புப் பிரதேசம் போன்று இப்பிரதேசமும், அதற்குரிய தமிழ்நிலை வரலாற்றாய்வுகளை இன்னும் முழுமையாகப் பெறவில்லை.

திருகோணமலை மாவட்டம் (கந்தளாய், தம்பலகாமம், மூதூர் ஆகியன உட்பட) சோழராட்சிக் காலத்தில் முக்கியம் பெற்ற இடமாகும். இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட தென்- மேற்கு நோக்கிய பெயர்வின் பின்னர் (13ஆம் நூற்றாண்டின் பின்னர்) இப்பகுதி இலங்கை வரலாற்றில், ஏறத்தாழ ஒல்லாந்தர் வருகைவரை, அதிகம் பேசப்படாத ஒரு பிரதேசமாகவே போய்விட்டது.

மட்டக்களப்பின் தெற்குப் பிரதேசங்களும், திருமலை மாவட்ட வட பிரதேசங்களும் 1940கள் முதலே சிங்களக் குடியேற்றத்துக்கு உட்பட்டன. அங்கு ஏற்கனவே சில “புராண” (பழைய) சிங்களக் கிராமங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் 1940 களின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியினரில் தமிழ், முஸ்லிம் சீவிய இருப்பு பிரச்சினையாக்கப் பெற்றது. இப்பகுதியின் வாழ்வியல் அமிசங்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

நன்றி இனிஒரு

5. வன்னி திரும்பிய முதியவர்கள் பலர் வறுமை,தனிமையால் பரிதவிப்பு

உதவ நிதி இல்லையெனக் கை விரிக்கும் தொண்டர் அமைப்புக்கள்

மோதலினால் இடம்பெயர்ந்து பின்னர் வட பகுதிக்கு திரும்பிச் சென்றவர்களில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுபவர்களாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மக்களுக்கு உதவுவதற்கான எந்தவொரு நிகழ்ச்சித்திட்டங்களும் இல்லையென்று கெல்ப் ஏஜ் சிறிலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்த லியன வதுகே கூறியுள்ளார். வயது முதிர்ந்த இந்த மக்களுக்கு உதவியளிக்கும் சில அமைப்புகளில் ஒன்றாக இந்த கெல் ஏஜ் சிறிலங்கா காணப்படுகிறது.

நிராதரவான நிலையிலுள்ள முதியவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் வன்னியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிப்பதாக ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

2009 மே யில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 3 இலட்சத்து 20 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றோ அல்லது உறவினர்களுடனோ தங்கியிருப்பதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த மக்களில் முதியவர்கள் உளநிலை பாதிக்கப்பட்டவர்களாக அல்லது தனித்துவிடப்பட்டவர்களாகக் காணப்படுவதாகவும் தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற போராடிக் கொண்டிருப்பதாகவும் சமூகப் பணியாளர்கள் கூறுகின்றனர். குடும்ப ஆதரவு இல்லாத முதியவர்கள் பலர் வறுமையையும் தனிமையையும் மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலைமையையும் உடல் நலக் குறைவையும் போஷாக்கின்மையையும் எதிர்நோக்குவதாக சுகாதாரப் பராமரிப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதியவர்கள் தாங்கள் கைவிடப்பட்டிருக்கும் உணர்வைக் கொண்டிருப்பதாகவும் சிலர் சடுதியாக தமது கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் கிளிநொச்சியைச் சேர்ந்த அங்கிலிக்கன் மத குருவான செல்லையா பிலிப் நேசகுமார் என்பவர் கூறுகிறார். வெளித்தோற்றத்திற்கு அவர்கள் சிறப்பானவர்களாக இருக்கின்றனர். ஆனால், 2 த சாப்தங்களுக்கும் மேலான யுத்த வடுக்களை மனதில் சுமந்து கொண்டு அவர்கள் இருக்கின்றனர் என்று நேசகுமார் கூறியுள்ளார். யுத்தம் முடிவடைந்த பொழுது விடயங்கள் சிறப்பாக இருக்குமென தான் எதிர்பார்த்திருந்ததாகவும் இப்போது வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கின்றது. ஆனால், எங்களை நாங்களே சீர்படுத்திக்கொள்ளவேண்டி உள்ளது என்று வீரன் பண்டாரம் (61 வயது) என்ற கிளிநொச்சியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

தமது பகுதியில் அபிவிருத்தி, புனர்வாழ்வுப் பணிகள் இடம்பெறுகின்ற போதிலும் முதிய மற்றும் தனிமையாகவுள்ளவர்களைக் கவனத்தில் கொள்வதாக எந்தத் திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லையென அவர் கூறுகிறார். என்னைப் போன்ற ஆட்களுக்கு உதவுவதற்கு எதுவும் இல்லை. நாங்கள் முக்கியமானவர்களாக இல்லையா என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

1986 இல் இருந்து ஓரங்கட்டப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் உரிமைகளுக்காக கெல்ப் ஏஜ் சிறிலங்கா செயற்படுகிறது. அதிகளவுக்கு அவர்களுக்கு பணியாற்ற அந்த அமைப்பு விரும்புகிறது. ஆனால், அதற்கான வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன. ஆதலால் மிகவும் பாரதூரமான விடயங்களிலேயே அந்த முகவரமைப்பு கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. கடந்த பெப்ரவரியில் இந்த அமைப்பு கிளிநொச்சியில் சிறிய உப அலுவலகத்தைத் திறந்திருந்தது. தனது பணிகள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் போன்றவற்றை ஒருங்கிணைந்து செய்வதற்கு இந்த அலுவலகம் திறக்கப்பட்டிருந்தது.

முதியவர்களில் பலர் கண்பார்வை குறைபாடுடையவர்களாகக் காணப்படுகின்றனர். 60 சதவீதமானவர்களுக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், 2030 வீதமானோருக்கு சத்திர சிகிச்சை தேவைப்படுகிறது. அங்குள்ளவர்கள் சிகிச்சை பெறுவதாயின் வவுனியாவிற்கு செல்ல வேண்டியுள்ளது. கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்குச் செல்வதாயின் 70 கிலோ மீற்றர் செல்ல வேண்டும். சத்திரசிகிச்சைக்கான செலவு 55 டொலர்களாகும். பலரிடம் இதற்கான பணம் இல்லை. அந்தளவு தொகை இந்த மக்களால் செலவிட முடியாத நிலைமை காணப்படுகிறது என்று லியன வதுகே கூறியுள்ளார். கிழக்கில் முதியோர் குழுக்களைப் பயன்படுத்தி வீட்டுத் தோட்டம், கோழிப் பண்ணை, சிறிய கால் நடைப் பண்ணை நடவடிக்கைகளை கெல்ப் ஏஜ் மேற்கொண்டுள்ளது.

அதிகளவு தேவைகள் உள்ளன. அவற்றை மேற்கொள்ள வேண்டி இருப்பதை நாம் அறிவோம். ஆனால், எம்மிடம் போதிய நிதிவளங்கள் இல்லை என்று லியன வதுகே கூறியுள்ளார்.

நன்றி தினக்குரல்

6.  யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு மாற்றம்


யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சிக்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் விவசாய பீடத்துக்கு அருகில் இதனை ஆரம்பிப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மூதவையும் பேரவையும் முடிவு எடுத்துள்ளன.

யாழ்.பல்கலைக்கழக பதிவாளரினால் அதற்கான விபர அறிக்கையை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதிக்கா க ஓரிரு வாரங்களில் சமர்ப்பிப்பதென முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  - வீரகேசரி இணையம்




இலக்கியப் பேரவையின் விருது பெறும் நூல்களின் விவரங்கள் வெளியாகின
இலங்கை இலக்கியப் பேரவையின் 2009 ஆம் ஆண்டுக்கான விருது, சான்றிதழ் பெறும் நூல்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளன.
விருதைப் பெறும் நூல்களாவன:
நீ.பி.அருளானந்தத்தின் "துயரம் சுமப்பவர்கள்" நாவல், கலாநிதி எஸ்.ஜெபநேசனின் "இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்கமிஷன்'  ஆய்வு,  அல் அஸீமத்தின் "குரல் வழிக் கவிதைகள் ', பண்டிதர் ம.ந.கடம் பேஸ்வரனின் "தீந்தேன்' சிறுவர் இலக்கியம், து.வைத்திலிங்கத்தின் "ஒரு வருக்காக அல்ல' சிறுகதை, சிவத்தமிழ் வித்தகர் சிவமகா லிங்கத்தின் "ஞானதீபம்' சமயம், பேராசிரியர் கலாநிதி ம.இரகு நாதனின் "பண்டைத் தமிழர் பண்பாட்டுத் தடங்கள்" பல்துறை, அகளங்கனின் "கங்கையின் மைந்தன்' நாடகம், திக்கு வல்லை கமாலின் " திறந்த கதவு சிறுகதைகள்' மொழி பெயர்ப்பு.
சான்றிதழ் பெறும் நூல்களாவன ஆரையூர் தாமரையின் "விற்பனைக்கு ஒரு கற்பனை', ஏ.இக்பாலின் "இக்பால் கவிதைகள்' ஆகிய கவிதைகள், கே.எம். எம்.இக்பாலின் "தாமரையின் ஆட்டம்',  ஓ.கே.குணநாதனின் "குறும்புக்கார ஆமையார்' ஆகிய சிறுவர் இலக்கியங்கள், வதிரி இ.இராஜேஸ்கண்ணனின் "தொலையும் பொக்கி ஷங்கள்', த.கலாமணியின் "பாட்டுத் திறந்தாலே" ஆகிய சிறுகதைகளும், கௌரி சண் முகலிங்கனின் "இலங்கையில், கல்வியும் இன உறவும்', ஸ்ரீ பிர சாந்தனின்" சதாவதானி நா.கதிர வேற்பிள்ளை' ஆகிய பல்துறையும் கலையார்வனின் "கூத்துக்கள் ஐந்து' நாடகம் ஆகிய நூல்களே விருதுகளும், சான்றிதழ்களும் பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.    



No comments:

Post a Comment