
.
முதல் இரவல் குரல் என்று சொல்வது இன்னும் கூடுதல் பொருத்தமாயிருக்கும். இந்த ”இரவல் குரல்” என்னும் ட்ப்பிங் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால்,இன்றைய மும்பைக் கேரள அழகிகளின் முகவழகையும், ’அன்னமெனும்படி’ நடையழகையும், இடையழகையும் கலாரசிகர்கள் இழந்திருப்பார்கள். அந்தளவிற்கு இன்றைய தமிழ்த் திரையுலகம் ”இரவல் குரல்”களிலேயே ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்த ”இரவல் குரல்” என்னும் ட்ப்பிங் முறை தமிழுக்கு வந்ததை ஒரு ‘விபத்து’ என்றே சொல்ல வேண்டும்.
தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப காலத்தில், சரீர அழகும் சாரீர அழகும் உடையவர்களே வெள்ளித்திரையின் முன்னணியில் மின்னினார்கள்.
அப்படியோர் புதிய வரவே கே.அஸ்வத்தம்மா
ஒரு நடிகையின் தேவைக்கு அளவான சரீர அழகும், பாட்டுத்திறனும், கன்னடக் கீச்சுக் குரல் கலந்த தமிழ்ப்பேச்சுத் திறனுமான சாரீர அழகும் இவருக்குமிருந்தன.
”கன்னடத்துப் பைங்குயில்” என்று தாரளமாக அழைத்திருந்திருக்கலாம்...
பாகவதரின் மூன்றாவது படமான ‘சிந்தாமணியி’ல், அவருக்கு ஜோடியாக சிந்தாமணியாக நடித்து பலரைப் பைத்தியமாகியவர் அஸ்வத்தம்மா.
ஒருவருடத்திற்கும் மேலாக வெற்றிவாகை சூடிக்கொண்டு ஓடிய சிந்தாமணியின் புகழ் வெளிச்சத்தோடு கே.அஸ்வத்தம்மா நடித்த இரண்டாவது படம் 39ல் வெளியான “சாந்த சக்குபாய்”

இவங்க தாங்க கே.அஸ்வத்தம்மா
“சாந்த சக்குபாயி’ன் படப்பிடிப்பு தொண்ணூறு விழுக்காடு முடிவடைந்திருந்த நிலையில், திரைப்படம் தமிழும் பேசத்தொடங்கிய 1931ம் வருடத்திலிருந்து, இந்த எட்டு ஆண்டுகளும் கண்டிராத புதிய பிரச்சனை ஒன்று, தமிழ் திரையுலகிற்கு தோன்றியது.
திடீரென அஸ்வத்தம்மா நலம் குன்றினார்; படுத்த படுக்கையானார். சில நாட்கள், சில வாரங்கள் காத்திருந்த தயாரிப்பாளரும், இயக்குனரும் மீண்டும் இவரால் எழுந்திருக்க முடியாதென்பதைத் தெரிந்துகொண்ட்தும் தவிதவித்துப் போனார்கள்.
சாந்த சக்குபாயை என்ன செய்வது? அப்படியே கைவிட்டு விடுவதா?
முதல் போட்ட தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஸ்டமாகும்?
படத்தின் இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணிக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது....
வலைவிரித்தார்கள். ...
அஸ்வத்தம்மாவின் உயரம், உருவம், அகலம் கொண்ட ஒருபெண்மணி சிக்கினார். அவரை அழைத்துவந்து, முகத்தை அருகே காட்டும் ‘க்ளோஸப்’ காட்சிகளைத் தவிர்த்து, தூர இருந்தே படம்பிடித்துவந்து சாந்த சக்குபாயை நிரப்பிவிட்டார்கள்.
இதேபோலவே அஸ்வத்தம்மாவின் குரலோடு ஒத்திருந்த வி.ஆர்.தனம் என்ற ஒருவரைப் பாடவும் பேசவும் வைத்தார்கள்.
ஒலிப்பதிவு கூடம், ரீ ரெக்கர்டிங் தியேட்டர் என்ற வசதிகள் இல்லாமல், காட்சியும் கானமும் ஒரே நேரத்தில் கமிராவில் பதிவு செய்யப்பட்ட காலமது.
இதிலிருந்தே, ஒருவருக்காக இன்னொருவர் இரவல் குரல் தரும் புதிய யுக்தி, அதாவது பின்னணி ஒலிப்பதிவு முறை தமிழில் அறிமுகமாகியது.
தமிழில் முதல் பின்னணிப் பாடகர் என்ற பெருமை வி.ஆர்.தனம் அவர்களை சேர்ந்தது.
“மதனன் மலர் அம்பால் எய்தனன் என்மேலே
வாடினேன்... வாடினேன்...
பறவைகள் மான்கள் கூட
இனி ஜோடி ஜோடியாக..மகிழ்ந்தாடும்
யாரும் துணையிலேனே…
நான்... யாரும் துணையிலேனே”
என்று தொடர்கிறது பாபநாசன் சிவன் அவர்கள் எழுதிய தமிழின் முதல் பின்னணிப்பாடல்.
“சாந்த சக்குபாய்” திரைப்படத்தில் அஸ்வத்தம்மாவிற்கு ஜோடியாக கே.சாரங்கபாணியும் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு, கொத்தமங்கலம் சீனு, பணிபாய் போன்றவர்களும் நடித்திருக்கின்றார்கள்
கே.சாரங்கபாணியும் பணிபாயும்
கொத்தமங்கலம் சுப்பு
முதல் இருமொழி நட்சத்திரம் என்னும் பெருமையுடன் அஸ்வத்தம்மா 1944ல் காசநோயால் காலமானார்.
-
-படங்களுக்கு நன்றி: தாஜுதீன்
No comments:
Post a Comment