இயற்றியவர்
–‘சிவஞானச்
சுடர்’ பல்மருத்துவக் கலாநிதி பாரதி
இளமுருகனார்
‘ஊனுடம்பு ஆலயமாம் ஒப்புயர் விலாச்சிவன்
உவந்துறையும் உள்ளம்பெருங் கோயில்’என்று
மானுடர்க்கு உணர்த்தியதே தமிழ்த்திரு மந்திரம்!
‘ மகத்தான பிறப்பான மனிதப் பிறப்பை’
‘வானுறையும் தேவருக்கும் கிட்டா தொன்றை ’
வையகத்து மனிதனவன் பெற்றி ருந்தும்
தானுணர்ந்து பிறப்பினது இலக்கை எய்தத்
தவறியவன் இறந்துபிறந் துழல்கின் றானே!
அழிவற்றவெம் உயிருக்குத் தந்த உடலுடன்
அறவாழ்வில் வாழ்வாங்கு வாழ்ந்து வினைகள்
அழிவுற்ற நிலைகாண அகவழி பாட்டை
ஆற்றியிறை பணியியற்றித் தியான வழியால்
அழிவில்லாப் பேரின்பந் தன்னை வேண்ட
அனைத்துப்பா சங்களெல்லாம் அகற்றி ஈற்றில்
அழிவோபிறப் பிறப்போவிலாப் பேற்றை ஈய்ந்து
அந்திவண்ணன் அடைக்கலந்தந் தணைப்பா னன்றோ?