அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேலும் சில பக்கங்கள்
அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் மாண்புடன் வழங்கும் ஆடல் வேள்வி 2023.
என் தந்தையின் வார்த்தைகளை உங்களிடம் கண்டேன் - சௌந்தரி கணேசன்
.
வானொலி மாமா நா.மகேசன் அவர்களின் அஞ்சலிக்கு கவிதை
புகழைத் தேடும் மனிதர் நடுவில்சுற்றிச் சுழன்று சத்தம் செய்யாது
பற்றி நின்று பணி புரிந்தவர் நீங்கள்
நீங்கள் நேர்மையானவர்
எவராலும் வாங்க முடியாதவர்
தோழமையாகப் பழகத் தெரிந்தவர்
பொதுவாழ்வில் நடிக்கத் தெரியாதவர்
கடவுளைப் போல் கருணை கொண்டவர்
எங்கிருந்தோ வந்து என் எதிரிலும் நின்றீர்கள்
என்னோடும் பேசினீர்கள்
என்னோடும் நடந்தீர்கள்
என்னோடும் சிரித்தீர்கள்
என் தந்தையின் வார்த்தைகளை உங்களிடம் கண்டேன்
என் சொந்தம் போல் உங்களையும் கொண்டாடினேன்
எனக்காகவே உங்களை நான் நேசித்து மகிழ்ந்தேன்
உங்கள்மீது கொண்ட பாசம் மனசுக்குள் புகைவதால்
வார்த்தைகள் அழுவதற்கு காத்திருக்கின்றன
ஆனாலும் இது அழுகின்ற நேரமல்ல
முத்தமிழை முன்னிறுத்தி
நீங்கள் முக்காலமும் செய்த பணி
எக்காலமும் எம் நினைவோடு கூடவர
உங்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டிய நேரமிது
நான் பார்த்து ரசித்த ஸ்வர சாகரம் - யாழ் ராமநாதன் மகளிர் கல்லூரி சிட்னி - செ.பாஸ்கரன்
.
நேற்றைய தினம் அதாவது செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி 2023 சிட்னியிலே ஸ்வர சாகரம் என்ற நிகழ்வு இடம்பெற்றது. யாழ் ராமநாதன் கல்லூரி பழைய மாணவிகளும், மூளாய் மருத்துவமனை ஆர்வலர்களும் சேர்ந்து இந்த நிகழ்வை அரங்கேற்றி இருந்தார்கள். வழமையாக சிட்னியிலே நிகழ்வுகள் இடம் பெறுவதாக இருந்தால் இந்திய திரைப்பாடகர்கள் அல்லது இலங்கை திரைப்பாடகர்கள் அல்லது அவுஸ்ரேலிய இளம் பாடகர், பாடகிகள் பங்கேற்று இடம் பெறும். இந்த நிகழ்ச்சி இம்முறை சற்று வித்தியாசமாக யாழ்ப்பாணம் கண்ணன் இசைக்குழு என்று அழைக்கப்படுகின்ற திரு.கண்ணன். ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் மட்டுமல்ல யாழ்ப்பாணம், மட்டக்களப்பு கொழும்பு, தொலைக்காட்சிகள், நாடகங்கள் என்று கால் பரப்பி தன்னுடைய திறமையினால் ஒரு சிறந்த இசை ஆளன் என்று தன்னை நிரூபித்தவர். அவரை அழைத்து இந்த ஸ்வர சாகரம் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனத்தின் அறிவிப்பாளரும், எழுத்தாளரும் குறிப்பாக இணுவை மண்ணின் மைந்தனுமான திரு கானா பிரபா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்கள். பல தெரியாத விடயங்களை தன்னுடைய அறிவிப்பின்போது எடுத்து கூறியிருந்தது, சில விடயங்களை தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. குறிப்பாக கண்ணனுடைய பின்புலம் பற்றியும், அவர் ஆற்றிய சேவைகள் பற்றியும், ராமநாதன் மகளிர் கல்லூரி பற்றியும், மூளாய் வைத்தியசாலை பற்றியும் அவர் பல விடயங்களை அறிந்து அதை பகிர்ந்து கொண்டார்.
வானொலி மாமா நா.மகேசன் அவர்களின் நினைவரங்கம் Sep 03 2023
.
காலம் சென்ற வானொலி மாமா நா.மகேசன் அவர்களின் நினைவரங்கம் செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதி 2023 ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வென்வேத் வில்லில் அமைந்திருக்கும் community centre மண்டபத்திலே மாலை 4 மணிக்கு இடம் பெற்றது. இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சி மூலம் தனது சமூகப் பணியை ஆரம்பித்து வானொலி மாமா என்று அழைக்கப்பட்ட நா.மகேசன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் பல ஊடகங்களிலும் தொண்டு நிறுவனங்களிலும் தனது இறுதிக் காலம் வரை சேவையாற்றியவர். சிறுவர்களுக்கான கதைகள் கவிதைகள் நாடகங்கள் உரைநடை விளக்கங்கள் போன்றவற்றை எழுதி நெறியாள்கை செய்தவர் சமய முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்தி நடைமுறை விளக்கத்தையும் நூலாக தந்தவர். இலக்கியப் பணி கல்விப் பணி சமூகப்பணி வானொலி இப்படி பல்வகை பணிகளை இறுதி வரை ஆற்றி மறைந்த நா.மகேசன் அவர்களுக்கான இந்த நினைவரங்கு இடம்பெற்றது.
பல சமூக பெரியவர்கள் கலந்து கொண்டு நா.மகேசன் அவர்களுடைய நினைவுகள் பற்றியும், அவரோடு சேர்ந்து பயணித்த விடயங்கள் பற்றியும், அவருடைய சமூகப் பணிகளில் சேர்ந்து பயணித்த விதம் பற்றியும் தங்களுடைய கருத்துக்களை வழங்கியிருந்தார்கள். அன்பாகவும் இனிமையாகவும் பண்பாகவும் பழகிய திரு நா மகேசன் அவர்களுடைய இந்த நிகழ்வை கம்பன் கழக பேச்சாளரும் எழுத்தாளரும் தமிழ் பாடசாலை அதிபருமான திரு திருநந்தகுமார் அவர்களும், வானொலியாளர் கவிஞர், எழுத்தாளர் சௌந்தரி கணேசன் அவர்களும் சமூகப் பணிகள் ஆற்றிக் கொண்டிருக்கும் திரு சிவகுமார் அவர்களும் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்திருந்தார்கள்.
பாருலகில் நீவரமாய் இருக்கின்றாய் பாரதியே ! [ 11-09-2023 ] பாரதியார் நினைவு நாள்
.மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
வறுமைதனில் வாடிடினும் வற்றாத கற்பனையால்
பாப்பாவை பார்த்தவன் பாடிய பா
பாரதியின் கற்பனையால் பலகவிஞர் நிலையிழந்தார்
அழகுதமிழ் பாவாணர் அனைவருமே வியந்தார்கள்
தெளிவுடனே சேதிகளை செந்தமிழால் பாடிநின்ற
வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே
மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட
எங்கள் தங்க ராஜா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
குடும்பக் கதைகளிலும், புராணப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றுக் கொண்டிருந்த சிவாஜி கணேசனை அடிதடி, மசாலா பாணிப் படங்களில் நடிக்க வைத்த பெருமை நடிகர் பாலாஜியை சாரும். அந்த வரிசையில் 1973ம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலரில் எங்கள் தங்க ராஜா படம் வெளிவந்தது. ஆனால் இந்தப் படத்தை பாலாஜி தயாரிக்கவும் இல்லை, அதில் நடிக்கவும் இல்லை. படத்தை தயாரித்து , டைரக்ட் செய்தவர் ராஜேந்திர பிரசாத் ஆவார். தெலுங்கில் பிரபலமான இவர் , தான் உருவாக்கிய தெலுங்கு படத்தை தழுவி தமிழில் இந்தப் படத்தைத் தயாரித்தார். அது மட்டுமன்றி அது வரை எம் ஜி ஆருடன் ஜோடியாக நடித்து வந்த மஞ்சுளா இந்தப் படத்தின் மூலம் சிவாஜிக்கு ஜோடியானார்.
அமைதியும் அடக்கமும் நிறைந்த டாக்டர் ராஜா, அடாவடித்தனமும், முரட்டுத்தனமும் கொண்ட பட்டாக்கத்தி பைரவன் இந்த இருவேறு மாறுபட்ட குணாம்சங்களை ஏற்று நடிக்க ராஜேந்திர பிரசாத் சரியான நடிகரையே தேர்வு செய்தார். அவர் தேர்வு வீண் போகவில்லை என்பதை காட்சிக்கு காட்சி தன் நடிப்பின் மூலம் நிரூபித்தார் சிவாஜி. அமைதியான அடக்கமான ராஜா பாத்திரம் அவருக்கு வழக்கமானது. ஆனால் பட்டாக்கத்தி பைரவன் பாத்திரத்தில் அவர் காட்டும் நடிப்பும், ஸ்டைலும் பிரமாதம்! மஞ்சுளா, நாகேஷ், மனோகர் , சௌகார் இவர்கள் நால்வரிடமும் அவர் காட்டும் ஆக்ட்டிங் ஓவர் ஆக்டிங் அல்ல ! எஸ்ஸ்ட்ரா ஓர்டனரி .
தரிசனம் அமைப்பின் "இளையநிலா பொழிகிறதே " சிட்னியில் இசை நிகழ்வு
.
தரிசனம் அமைப்பு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி 2023 ஆம் ஆண்டு இளையநிலா பொழிகிறதே என்ற நிகழ்ச்சியை நடாத்தி இருந்தது. மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றது. போமன் ஹோல் பிளாக்டவுனில் இந்த நிகழ்வு இரவு நிகழ்வாக இடம் பெற்றிருந்தது.
இலங்கையில் கல்விக்காக உதவி நாடும் பாடசாலைகளின் மேம்பாட்டிற்கான நிகழ்வு என்று இந்த நிகழ்வை குறிப்பிட்டிருந்தார்கள். குறிப்பாக மலையக மாணவர்களின் தேவைகளை அறிந்து உதவி வரும் இந்த அமைப்பு தரிசனம் நிகழ்வை வருடம் தோறும் நடத்தி வருகின்றார்கள். குறிப்பாக கூற வேண்டுமானால் இளைஞர்களும் யுவதிகளும் இணைந்து இந்த நிகழ்வை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இசை துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் இதிலே ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். கேஷிகா அமிர்தலிங்கம் அவர்கள் முழுமூச்சாக இந்த நிகழ்ச்சிக்காக மற்ற இளைஞர்களையும் ஒன்றிணைத்து தரிசனத்தினுடைய நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றார்.
அமிர்தலிங்கம் , சாரதா அமிர்தலிங்கம் நேரடியாக இலங்கை சென்று மாணவர்களுக்கான உதவிகள் புரியும் காணொளியும், பல பாடசாலைகள் பயன் பெற்ற நிகழ்வும் காண்பிக்கப்பட்ட்து.
வடிவழகன் நல்லூரான் தேர்பார்ப்போம் வாருங்கள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
ஆதவனின் ஒளியணைக்க ஆறுமுகன் அருள்சுரந்து
திரை விமர்சனம்: தமிழ்க்குடிமகன்
.
கிராமத்தில் யார் இறந்தாலும் இறுதிச்சடங்குகளைச் செய்பவர் சின்னச்சாமி (சேரன்). செய்யும் தொழிலால் அவமரியாதைக்கு உள்ளாகும் அவர், அந்தத் தொழிலை விட்டுவிட்டு, பால் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகிறார். இந்நிலையில் ஊர் பெரியவர் சுடலையின் (லால்) தந்தை பேச்சிமுத்து (மு.ராமசாமி) இறந்துவிட, இறுதிச்சடங்கு செய்ய சின்னச்சாமியை அழைக்கிறார்கள். அவர் மறுக்க, மொத்த ஊரும் அவருக்கு எதிராகத் திரும்பி மிரட்டுகிறது. ஒரு கட்டத்தில் ஊரைவிட்டுச் செல்லும் சின்னச்சாமி, ‘நாதியற்ற என்னை சாதியற்றவனா மாத்துங்க’என்று வழக்குத் தொடுக்கிறார். நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறது என்பதுதான் ‘தமிழ்க்குடிமகன்’கதை.
தாங்கள் விரும்பும் தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொன்னாலும் கிராமங்களில் சில தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் சாதியத்துக்கு எதிராகவும் அழுத்தமான கருத்தை முன் வைக்கிறது ‘தமிழ்க்குடிமகன்’. இதற்கு முன் சாதி பற்றி வெளியானத் திரைப்படங்கள், தங்களின் வலிகளை மட்டுமே பேசியிருக்கின்றன. அதிலிருந்து வேறுபடுகிறது இந்தப் படம்.
இப்படியொரு கதையைச் சொல்லி அதற்கொரு தீர்வும் சொன்னதற்காகவே இயக்குநர் இசக்கி கார்வண்ணனைப் பாராட்டலாம். மனிதனின் தேவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்றபோது எங்கிருந்து வந்தது சாதி என்று கேள்வி கேட்கும் படம், ஓர் உண்மைச் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோல நகர்கிறது.
படத்தில் பொழுதுபோக்கு விஷயங்கள் குறைவாக இருப்பதால் முழுமையான திரை அனுபவத்தைத் தரத் தவறுகிறது. முதல் பாதி படம் அங்கங்குச் சென்று குழப்பினாலும் இரண்டாம் பாதியில்தான் கதைக்குள் முழுமையாக உள் நுழைய முடிகிறது.
தலைமுறை தலைமுறையாக, செய்கிற வேலையைச் சுட்டிக்காட்டி தாழ்த்துகிற சமூகத்தில், தலைநிமிர்ந்து நிற்கப் போராடும் சின்னச்சாமியாக சேரன். ஊர்க்காரர்களின் அவமானத்தால் கூனிக் குறுகி நிற்கும்போதும், சுயமரியாதை குறையும்போது தனக்கானக் குரலை உயர்த்தும்போதும் கவனிக்க வைக்கிறார் சேரன்.
ஊர் பெரிய மனிதராகவும் சாதி வெறிபிடித்தவராகவும் லால், ஒரு தெற்கத்தி மனிதரை கண்முன் நிறுத்துகிறார். அவர் மச்சானாக வரும் அருள்தாஸ் தனது அடாவடியை முகத்திலேயே காட்டிவிடுகிறார்.
சேரனின் மனைவியாக வரும் பிரியங்கா, தங்கையாக வரும் தீப்ஷிகா, அவரைக் காதலிக்கும் பெரிய வீட்டு பிள்ளை துருவா, சின்னச்சாமிக்கு ஆதரவாக நிற்கும் காந்தி பெரியார் வேல ராமமூர்த்தி, போலீஸ் அதிகாரி சுரேஷ் காமாட்சி, வழக்கறிஞர்களாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், ரவிமரியா, நீதிபதி ராஜேஷ் உட்பட அனைவரும் தேவையான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.
சாம் சிஎஸ்-சின் பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம் தந்திருக்கிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு தென்மாவட்ட கிராமத்தை கண் முன் கொண்டுவருகிறது. திரைக்கதையை இன்னும் தெளிவாகவும் அழுத்தமாகவும் கையாண்டிருக்கலாம் என்றஎண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் பேசிய விஷயங்களுக்காக இந்தத் தமிழ்க்குடிமகன் வரவேற்கப்பட வேண்டியவன்.
நன்றி https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema