“ கோத்தா கோ
“ என்ற கோஷம் “ கோத்தா பிஸ்ஸா “ என மாறிய
காட்சியை கடந்த ஒன்பதாம் திகதி பார்த்தோம்.
“ கோ “ என்று
சொல்லப்பட்ட ஆங்கிலச் சொல்லின் அர்த்தம் “ போ “ !
“ பிஸ்ஸா “ என்ற சிங்களச் சொல்லின் அர்த்தம் பைத்தியக்காரன்.
இந்த அவலத்தை இதுவரையில் இலங்கை வரலாற்றில் சந்தித்த ஒரே ஒரு
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷதான் என்பதற்கு இருவேறு அபிப்பிராயங்கள் இல்லை.
இறுதியாக அவர் நாடாளுமன்றத்திற்கு
அழையா விருந்தாளியாகச் சென்றபோதே , அங்கிருந்த
எதிர்க்கட்சியினர் கோத்தா கோ என்று தொடர்ந்து
கோஷம் எழுப்பியதையடுத்து, எழுந்து சென்றவர், அச்சமயத்திலாவது, தனது எதிர்காலம் குறித்து சிந்தித்திருக்கவேண்டும்.
காலிமுகத்திடலில் அமைதியாகத்தான்
எழுச்சிகொண்ட மக்கள்
போராட்டம் நடத்தினார்கள்.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அத்தகைய போராட்டங்களை மக்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம் கிஞ்சித்தேனும் கவனத்தில் கொள்ளாமல்,
தனது வசம் நிறைவேற்று அதிகாரமும் பொலிஸ் உட்பட முப்படைகளும் இருக்கிறது எனவும் நினைத்தவாறு,
துப்பாக்கியையும், பெட்டன் பொல்லுகளையும் கண்ணீர்ப்
புகையையும் தண்ணீர்த் தாரையையும் வைத்துக்கொண்டு மக்களை அடக்கிவிடலாம் எனவும் நம்பிக்கொண்டிருந்தவர், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளித்துக்கொண்டு, “ தான் பதவி விலகத்தயார் “ என்றார்.
மிகவும் தாமதமாகவே தனது பதவி விலகல் கடிதத்தையும் வெளிநாடு ஒன்றிலிருந்து, அங்குள்ள
இலங்கைத் தூதரகம் ஊடாக சபாநாயகருக்கு அனுப்பினார்.
குறிப்பிட்ட தாமதம் கூட
பல சந்தேகங்களை எழுப்புகிறது. தனது சகோதரர்களை
காப்பாற்றுவதற்காக சட்டத்தின் ஓட்டைகளை தனது நம்பிக்கைக்குரிய சட்டத்தரணிகள் மூலம்
ஆராய்ந்திருக்கவேண்டும். இரத்தபாசம் எதனையும்
செய்யும்.
ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்த
ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை “ பிஸ்ஸா “ எனச்சொல்லியிருக்கிறார்கள். அப்படியாயின் அவர் தனக்கு 69 இலட்சம் மக்கள் ஆணையைத் தந்திருக்கிறார்கள் என்று இறுமாப்புடன் சொன்னாரே….?!
அம்மக்கள் “ பிஸ்ஸா “ வா…?
இல்லை, இல்லை நாம் தெளிவுடன்தான் இருக்கின்றோம் என்று நிரூபித்துவிட்டனர்
போராட்டத்தில் எழுச்சிகொண்டு ஈடுபட்ட மக்கள்.
இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் தலைநகரத்தில் நடந்த எரியூட்டல்,
சூறையாடல், படுகொலை செய்தல் முதலான காட்சிகள் அரங்கேறின.