காவல்துறை உங்கள் நண்பன் – என்ற வாசகம் எமது தமிழ் சமூகத்தில் பொதுவானதாக இருந்தபோதிலும், இலங்கை, இந்தியா உட்பட கீழைத்தேய நாடுகளிலும் குறிப்பிட்ட
சில மேலைத்தேய நாடுகளிலும் நடைமுறையில் அவ்வாறில்லை என்பதை நாம் ஊடகங்களில் பார்த்து
வருகின்றோம்.
பொலிஸார் அப்பாவிப் பொதுமக்கள்
மீது நடத்தும் சித்திரவதை குறித்து ஜெய்பீம்
திரைப்படத்தில் மட்டுமல்ல, வேறும் பல செய்தி ஆவணப்படங்களிலும் தெரிந்துகொள்ள
முடியும்.
இந்திய சினிமா அது எந்த
மொழியில் வெளிவந்தாலும், பொலிஸாரை கோமாளிகளாகவும், வில்லன்களாகவும், கற்பனை செய்தும் பார்க்க முடியாத நேர்மையாளர்களாகவும்
சித்திரித்து யதார்த்தத்திற்கு புறம்பான திரைக் கதைகளை வழங்கிவருகின்றது.
கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில்
கிழக்கிலங்கை திருக்கோவில்
பொலிஸ் நிலையத்தில் நடந்த துப்பாக்கி வேட்டுச்சம்பவத்தில் ஒரு பொலிஸ் சார்ஜன்டினால் கொல்லப்பட்ட – படுகாயமுற்ற
பொலிஸார் பற்றிய செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தப்பின்னணிகளுடன்தான்
கடந்த 29 ஆம் திகதி கொழும்பில் மறைந்த பொலிஸ் அத்தியட்சர் கே. அரசரத்தினம் அவர்கள் பற்றிய
நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன.
அவர் குறித்த இந்த அஞ்சலிப்பதிவின்
தொடக்கத்தில் சொல்லப்பட்ட “ காவல்துறை உங்கள்
நண்பன் “ என்ற வாசகத்திற்கு முற்றிலும் பொருத்தமானவராக விளங்கியவர்தான் அரசரத்தினம்
அவர்கள்.
எப்பொழுதும் புன்னகை தவழும்
முகத்துடன் நடமாடிய அவரது திடீர் மறைவுச்செய்தியை தொலைவிலிருந்து அறிந்தபோது கலங்கிவிட்டேன்.
2011 ஜனவரியில் நாம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சர்வதேச
தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபோதுதான் பொலிஸ் அத்தியட்சர் அரசரட்ணம் அவர்கள் எனக்கு அறிமுகமானார்.
அவர் அப்போது கடமையிலிருந்தமையால்
பொலிஸ் சீருடையுடனேயே வருகை தந்து நிகழ்ச்சிகளில்
கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் மாநாடு நடைபெற்ற
நான்கு நாட்களும் அங்கே பொலிஸ் பாதுகாப்பினையும் அவர் வழங்கினார்.