மேலும் சில பக்கங்கள்

நாளைய தினம் பதவியேற்கும் கோத்தா!


17/11/2019 இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை காலை அனுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளார்.

செம்மொழியாய் உயர்ந்ததுவே ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


    கம்பனது காவியமும்  கருத்துநிறை திருக்குறளும்
          உம்பர்தமை உருகவைக்கும் உணர்வுநிறை திருமுறையும் 
    எம்பெருமை பேசிநிற்கும் ஏற்றமுடை இலக்கியமும் 
            இன்னமுதாம் தமிழ்மொழியின் இலக்கணமாய் இருக்குதன்றோ !

    தேமதுரத் தமிழாக திசையெங்கும் சென்றதமிழ் 
        பாவலர்கள் காவலர்கள் பாசமுடன் வளர்த்ததமிழ் 
    அன்னியரின் ஆட்சியிலும் அழகிழக்கா நின்றதமிழ் 
          அறிவுலகத் தமிழாகி அதியுயர்வு பெற்றுளது ! 

    கணனியிலும் தமிழ்வந்து கருத்துகளை பகர்கிறது
          கருவறையில் தமிழ்புகுந்து கடவுள்துதி செய்கிறது 
    உணர்வுநிறை மொழியென்று உலகத்தார் எண்ணுவதால்
          உவப்புடனே தமிழ்பயில உளம்விரும்பி வருகின்றார் !

    பொதிகைமலை தமிழோடு இணைந்ததெனச் சொல்லுகிறார்
            புத்துணர்வுத் தமிழிப்போ இமயமலை போலாச்சு 
    அனைவருமே தமிழ்பற்றி ஆராய்ச்சி செய்கின்றார்
            அனைத்துலகும் தமிழுக்கு அகவணக்கம் கொடுக்கிறதே !

    அன்னியரைக் கவர்ந்ததமிழ் ஆட்சியிலே அமர்ந்ததமிழ்
            சொன்னயமும் பொருணயமும் சுவையாகச் சொல்லுந்தமிழ் 
    நன்நயமாய் வாழுதற்கு நல்லொழுக்கம் நவிலும்தமிழ்
            நம்முணர்வில் கலந்திங்கு நமையியக்கி நிற்கிறதே !

இலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது


அலன் கீனன்- சர்வதேச நெருக்கடி குழு
தமிழில் - ரஜீபன்
இலங்கை 16 ம் திகதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில்  நிற்பவராக பரவலாக  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
2015 இல் முடிவடைந்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் -அரசியல் வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் இடம்பெற்றதாக சிறுபான்மையினத்தவர்களும்,எதிர்கட்சி அரசியல்வாதிகளும் குற்றம்சாட்டும் தசாப்தகால ஆட்சியில் இவரே முக்கிய நபராக காணப்பட்டார்.
அக்காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர், முக்கிய அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்,ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டனர். இந்த குற்றங்களிற்காக யாரும் பொறுப்புக்கூறசெய்யப்படவில்லை.

எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

ஒரு இளம் பெண் தன் பெயரின் சுமைதாங்காமல் தூக்கில் தொங்குகிறாள் அவள் உடலின் எடையைவிடவும் அந்த பெயரின் எடை ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது...
November 15, 2019






எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்
“அப்பா.. எனது பிரச்சினையே
எனது பெயர்தான்”
செல்போனில் வைக்கப்பட்டிருந்த
ஒரு பெண்ணின்
தற்கொலைக் குறிப்பின் வாசகம்
கண்ணில் விழுந்த ஒரு துரும்பைபோல
உறுத்துகிறது
உங்களுக்கு அது விசித்திரமாக இருக்கலாம்
ஒருவர் பெயர் அவரை
தற்கொலைப்பாதை வரை
அழைத்துச் செல்லுமா எனில்
ஆம், அழைத்துச் செல்லும்
அவளது பெயர்
குறுவாளின் பளபளக்கும் முனையாக
அவளை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது
பிறகு ஒரு நாள் அது
அவள் தொண்டையில் இறங்கியது
எனக்கும் அப்படி இருக்கிறது
ஒரு பெயர்
நான் அந்தத் துயரத்தை நீண்டகாலமாக
சுமந்துகொண்டிருக்கிறேன்
அந்தப் பெயரினால்
நான் சில இடங்களில்
வாசல்படியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறேன்
சில இடங்களில்
சகிப்புத் தன்மையுடன்
வரவேற்பரை வரைக்கும்

ஜனாதிபதித் தேர்தல் - 2019 ; நடைபெறக்கூடியது என்ன ?


13/11/2019 ஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திக­தி­யன்று நடை­பெற்று ஓரிரு நாட்­களில் புதிய ஜனாதிப­தியும் தெரிவு செய்­யப்­பட்­டு­வி­டுவார். யார் புதிய ஜனாதிப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார் என்ற ஏக்­கத்­திலும் ஊகத்­திலும் மக்கள் உள்­ளனர். அதற்கு காரணம் 35 அபேட்­ச­கர்கள் போட்­டி­யி­டு­வ­தல்ல வேறு கார­ணங்­க­ளாகும். எனினும் பெரும்­பா­லான மக்கள் ஜனாதிபதித் தேர்­தலில் டம்மி அபேட்­ச­கர்­களும் அர­சி­ய­லையே பொழு­து­போக்­காக கொண்ட ஜோக்­கர்­களும் போட்­டி­யி­டு­வதால் அவர்­களில் யார் வெற்றி பெறுவர் என்­பதை தீர்­மா­னிப்­பதில் சங்­க­டப்­ப­டாமல் நிச்­ச­ய­மாக சஜித், கோத்­தபாய, அநுர குமார திசா­நா­யக்க ஆகிய இவர்­களில் ஒரு­வரே ஜனாதிப­தி­யாக வருவார் என்­பதை உணர்ந்தும் உள்­ளனர் என்­ப­தையும் நாம் அவர்­களின் செய­லிலும் பேச்­சுக்­க­ளிலும் இருந்து காணக்­கூ­டி­யதாய் இருக்­கி­றது.


மழைக்காற்று - அங்கம் 10 - ( தொடர்கதை ) - முருகபூபதி


வீட்டில் மயான அமைதி.
மழைவிட்டாலும் தூவானம் விடாதபாடயில்லை. மின்னலும் அதனைத்தொடரும் இடியோசையும் குறைந்துவிட்டது.                            மின்னலும் இடியும் ஒரேநேரத்தில் உயிர்த்தாலும், ஓசையை விட ஒளியின் வேகம் அதிகம் என்பதால், முதலில் மின்னல்தான் எமக்குத் தெரிகிறது “ என்று அப்பா, அபிதாவுக்கு சிறிய வயதில் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
அந்த விஞ்ஞானத்தை அப்பா அவளிடம் சொன்ன நாள் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது அவளுக்கு ஐந்துவயதிருக்கும். அப்பாவின் அம்மாவான பாட்டியாரிடம்தான் அபிதா எப்போதும் ஒட்டிக்கொண்டிருப்பாள்.
இரவில் அபிதாவை, பாட்டுப்பாடியும் கதைகள் சொல்லியும் உறங்கவைப்பதும் பாட்டிதான்.  ஒரு மழைக்காலத்தில்   மின்னலையடுத்து இடிமுழங்கியதும்,   அபிதா,      பாட்டீ  “ என உரத்து ஓலமிட்டவாறு,  பாட்டியை இறுக அணைத்துக்கொண்டாள்.  அவளது பயத்தைப்போக்குவதற்காக அன்று இரவு பாட்டியம்மா, அவளுக்கு ஒரு கதை சொன்னாள். அபிதாவை இறுக அணைத்துக்கொண்டு        அர்ச்சுனா… அர்ச்சுனா…   என்று உரத்து சத்தமிட்டா.   “ யார் பாட்டி அர்ச்சுனா..?  “ என்று அவள் கேட்டதனால் சொல்லப்பட்ட கதை.
மகாபாரதத்தில் வரும் துரியோதனனும் வீமனும் சிறுவயதில் சண்டை பிடித்தார்களாம். அவர்களின் கதாயுதம் ஒன்றுடன் ஒன்று மோதும்போது இடியோசைபோன்று இருக்குமாம். பெரியப்பா – சித்தப்பா பிள்ளைகளான அவர்கள் இருவருக்கும் மத்தியில் சிறுவயதில் தோன்றிய மோதல்தான் பின்னாளில் பங்காளிச்சண்டையாக வளர்ந்தது என்பது அபிதாவின் பாட்டி சொன்னகதை.
சிறுவயது விளையாட்டாக தொடங்கிய மோதல் கடுமையானதால், அதனைப்பார்த்துக்கொண்டிருந்த வீமனின் தாயார்  குந்திதேவி,  அவர்களை விலக்குப்பிடிப்பதற்காக தனது மற்றும் ஒரு மகன் அர்ச்சுனனை உரத்துக்கூவி அழைத்தாளாம்.
வானத்தில் வதியும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடப்பதாகவும், வீமனும் – துரியோதனனும் இடியோசை எழுப்புமாப்போன்று சண்டையிடுவதாகவும், அவர்களை விலக்குப்பிடிப்பதற்காக குந்திதேவி அர்ச்சுனனை அழைப்பதாகவும் அபிதாவின் பாட்டி கதை சொன்னா.
அந்தக்கதையை ஆர்வமுடன் கேட்ட அபிதா,  “இடியோசைதான் கேட்கிறது, குந்திதேவியின் குரல் கேட்கவில்லையே   எனச்சொன்னாள்.
அவர்களின் கதாயுத மோதலின் சத்தத்தில் அது கேட்காது. அதனால்தான் நான்,   “ அர்ச்சுனா…. அர்ச்சுனா..   என்று சத்தமிடுகிறேன் எனச்சொன்ன பாட்டி அபிதாவை மடியில் கிடத்தி, ஆராரோ பாடல் பாடத்தொடங்கினா.

வாழ்வை எழுதுதல் அங்கம் – 04 வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் ? எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் !! - முருகபூபதி


நீண்ட காலத்திற்குப்பின்னர் அவன் என்னைப்பார்க்க வந்தான்.  அவனை     “ அவர்  “ என்று அழைக்காமல் மரியாதைக்குறைவாக   “அவன்  “ என்று அழைப்பதாக வருந்தவேண்டாம்.
அவன் பிறப்பதற்கு முன்னர் – நூறாண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தமையால், அவ்வாறு அழைக்கின்றேன்.
பல முன்னோர்களையும்  “ அவன்  என்றுதானே விளிக்கிறார்கள். ஏன்… சில சந்தர்ப்பங்களில் எம்மைப்படைத்த ஆண்டவனைக்கூட “ அவன்  படைத்தான்  எனத்தானே சொல்கிறார்கள்.
நான், அவன் அப்பன் பிறப்பதற்கு முன்பே பிறந்திருக்கின்றேன். என்னைப்படைத்தவர்களினால்   என்னிடம் வந்து செல்பவர்களுக்காக  உருவாக்கப்பட்ட  குழந்தைகள் வந்து திரும்பிய  அக்காலத்தில், அவன் பாட்டன் பிறந்த ஊர்க்காரர்கள் கல்லெறிந்து  என்னைக் களைக்கப்பார்த்தார்கள்.
அவனது பாட்டி அந்தக்கதைளை அவனிடம் அவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாள். நீண்ட காலத்திற்குப்பின்னர் என்னை அன்று பார்க்க வந்திருந்த அவன், எனது மேனியை தொட்டுப்பார்த்து பரவசமடைந்தான்.
அவனுக்கு அந்தநாள் நினைவுகள் வந்திருக்கவேண்டும். அவனை  அன்று அழைத்துவந்தவர்கள், என்னிடத்தில் விட்டுச்சென்றுவிட்டார்கள்.
அவன் என்னிடமிருந்து விடைபெற்றுச்செல்வதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. அதனால்,  என்னருகில் வந்து எனது அங்க இலட்சணங்களை ரசித்தான்.
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கதைகள் இருக்கின்றன. அதுபோன்று எனக்கும் ஒரு கதை நீண்ட வரலாறாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
1902 ஆம்  ஆண்டில் பிறந்த எனக்குள்ளும் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன.  நான் பல தடவைகள் செத்துப்பிழைத்திருக்கின்றேன்.
அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன் அறிந்துவைத்திருக்கும் ஒருவரின் மகனும் எழுத்தாளன்தான். கவிதையும் எழுதியிருக்கின்றான்.
அவனுக்கு அன்று என்னைப்பார்த்ததும் அந்த அன்பரின் மகன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.
எனக்கு நேர்ந்த சோதனைகள் அவ்வேளையில் அவனுக்கு நினைவுக்கு வந்தமையால், அந்தக்கவிதையும்  உடனே அவனது மனக்கண்ணில்  தோன்றியிருக்கவேண்டும்.
  செத்துத் தொலைக்கலாம்
செத்தென்ன ஆகப்போகிறது…?
இருந்து தொலைக்கலாம் ! 
இதுதான் அந்தக்கவிதை.  எனது வாழ்க்கையும் இப்படித்தான் ஆகிப்போனது.
பல இலட்சம்பேரின் பாதங்கள் எனது மடியில் பதிந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், தலைவர்கள் முதல் அரசியல் கேடிகள் வரையில் வந்து  நின்று  நடமாடிய  அந்த மடியில் அவன் நின்று என்னை ரசித்தான்.  
எனது மடியிலிருந்து மக்கள் ஏறி இறங்கும் எனது குழந்தைகளின் ஓடுபாதையையும் கழற்றி எடுத்துச்சென்றவர்களை நன்கறிவேன். எனது பாதுகாப்பு அரண்களை பிய்த்தெடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு அரண்களை உருவாக்கிக்கொண்டவர்களையும் அறிவேன். நான் மக்களின் சொத்து என்று சொல்லித்தான் என்னை அறிமுகப்படுத்தினார்கள்.
ஆனால், மக்களாலும் மக்களை ஆண்டவர்களினாலும்  நான் சூறையாடப்பட்டேன். எனக்கு நேர்ந்த கதிபற்றி  பல்லாயிரம்பேர் பேசியிருக்கலாம். கதைகதையாகச்  சொல்லியிருக்கலாம். என்னைக்காயப்படுத்தி சூறையாடியவர்களும் தங்கள் தரப்பில் அதற்கான நியாயங்களை சொல்லியிருக்கலாம்.
எத்தனை காதலர்களை நான் இணைத்திருப்பேன். எத்தனைபேரின் வாழ்க்கையில் வசந்தம் வீசுவதற்கு நான் காரணமாக இருந்திருப்பேன். பகலும் இரவும் என்னிடம் வந்தவர்கள் ஒரு கட்டத்தில் என்னிடம் வராமலேயே காணாமல்போய்விட்டார்கள்.
அதனால் நான்  பாழடைந்த பாவியானேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன், அனைத்துகொடுமைகளையும் சகித்துக்கொண்டு நான் வாழ்ந்த நினைவுகளை எனது மடியிலிருந்து மீட்டுக்கொண்டிருந்தான்.
                                        அவனுக்கு பசியெடுத்தது. எனது மடியிலிருக்கும் ஒரு சிற்றுண்டிச்சாலைக்குச்சென்றான்.  பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவன்,  “ மாத்தயாட்ட மொனாத ஓனே..?    என்று தனது தாய்மொழியில் கேட்டான்.
அதன் பொருளை இவ்வாறும் எடுத்துக்கொள்ளலாம்.
பெரியவரே உங்களுக்கு என்ன வேண்டும்..?
அய்யாவுக்கு என்ன வேண்டும்..?
சேர், உங்களுக்கு என்ன வேண்டும்..?
துரை உங்களுக்கு என்ன வேண்டும்..?
அந்த பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த தலைவர்களிடம் ஏதேதோ கேட்டு,  இறுதியில் எல்லாவற்றையும் கோட்டைவிட்டவர்களும் இப்போது என்னிடம் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வருபவர்களிடம் அந்தச்சிற்றுண்டிச்சாலையிலிருந்து ஒரு குரல்  “ என்ன வேண்டும்..?  என்று பெரும்பான்மை இனத்தின் மொழியில் கேட்கிறது.

முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி ” ஆய்வு நூல் மதிப்பீடு: நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வரலாற்றை நயமுடன் பதிவுசெய்கிறது. ஞா. டிலோசினி ( இலங்கை - கிழக்கு பல்கலைக்கழகம்)


அவுஸ்திரேலியப் புகலிட எழுத்தாளராகிய முருகபூபதி அவர்கள், ஈழத்து இலக்கியம் மற்றும்  ஊடகத்துறை வளர்ச்சியில்  முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கூடாக  தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்திய இவர்,   இருபதுக்கு மேற்பட்ட நூல்களை   இலக்கிய உலகிற்கு தந்துள்ளார்.
முருகபூபதியின் அயராத முயற்சியினால் இலங்கையில் பாரதி என்ற ஆய்வு நூல், முகுந்தன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.  இலங்கையில் பாரதி , மகாகவி பாரதி பற்றிய பல்வேறு விடயங்களை  நீண்ட காலமாக  தேடித்தொகுத்து  ஆராய்ச்சி பூர்வமாக எழுதப்பட்டுள்ள    ஆய்வு நூலாகும்.
இந்நூலில்  பாரதியை அறிமுகம் செய்யும்  அங்கம் 01  இல், பாரதியின் நண்பர்கள் பற்றிக் கூறப்படுகிறது. பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட பாரதியின் நண்பர்களை விபரிக்கும் இப்பகுதியில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல்கள், வர்த்தகர்கள், தீவிரவாதிகள், விடுதலைப்போராளிகள், பத்திரிகையாளர்கள், சாதாரண ஹரிஜனங்கள், பாமரர்கள் எனப் பலதரப்பட்டவர்களும்  வருகிறார்கள்.
அங்கம் 02  இல் மதம் பிடித்த யானையிடம் இருந்து பாரதியைக் காப்பாற்றிய குவளைக்கண்ணன் என்கின்ற கிருஷ்ணமாச்சாரியார் பற்றியும், பாரதியின் மறைவு பற்றியும், பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமி பற்றியும் கூறப்படுகின்றது. இப்பகுதியில் பாரதியின் ஞானகுரு இலங்கையர் என்ற பெருமையையும் பாரதி நேரில் சந்தித்த ஒரேயொரு இலங்கையர் யாழ்ப்பாணத்துச் சாமி என்பதையும்  நூலாசிரியர் அழுத்திக் கூறுகின்றார்.
பாரதியின் ஞானகுரு பற்றி  ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல இடங்களில் பதிவுகள் இடம்பெற்றிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பாரதியின் ஞானகுரு பற்றி செங்கைஆழியான் எழுதிய திரிபுகள் பற்றியும் இப்பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது. வேறொரு சாமியாரை பாரதியின் ஞானகுருவாக நிரூபிக்க ஏன் செங்கைஆழியான் முயன்றார் என்ற கவலைக்குரிய விமர்சனமும் இடம்பெற்றுள்ளது.
1930  இற்குப் பின்னரே பாரதியின் பெருமையும் புகழும் இலங்கையில் பரவத்தொடங்கியது. பாரதியின் புகழ் இலங்கையில் பரவுவதற்கு காரணமாக இருந்த சுவாமி விபுலானந்தர், வ.ரா, ப.ஜீவானந்தம் ஆகியோர் பற்றியும் , ஈழத்தில் 1 – 8 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்திட்டத்தில் பாரதியின் பாடல்களை சேர்த்திருக்கும் விபுலானந்த அடிகள் 1932  இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் Bharathi Study Circle  என்னும் அமைப்பை நிறுவினார். அத்தோடு பாரதி பற்றி ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதி பாரதியின் புகழைப் பரப்பினார்  முதலான தகவல்களும் இந்நூலின்  முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்த ஜீவானந்தம் (ஜனசக்தி  பத்திரிகை ஆசிரியர்)  பாரதியின் கருத்துக்களை பாரதியின் சிந்தனைகளை பரப்பியதுடன்,   மறுமலர்ச்சி சிந்தனைகளை பாரதியின் பாடல்களினூடாகவே பரப்பினார் என்ற தகவலும்  சொல்லப்படுகிறது.  இலங்கையில் சிறிது காலம் வாழ்ந்த வ.ராமசாமி அய்யங்கார் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைகள் மறுவாழ்வு முதலான பாரதியின் கருத்துக்களை  இலங்கையில் வீரகேசரி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றும் போது அப்பத்திரிகையூடாகப் பரப்பினார் என்ற செய்தியும் அங்கம் 03 இல் இடம்பெற்றுள்ளன.   அங்கம் 04 இல் பாரதியாரின் கருத்துக்களை, சிந்தனைகளை பரப்பிய ஈழத்துப் பத்திரிகைகளையும் பத்திரிகையாசிரியர்களையும் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.
பாரதி ஒரு கவிஞர் மட்டுமல்ல,   சில பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். பத்திரிகையில் இடம்பெறும் Cartoon   கலைக்கு வித்திட்ட முன்னோடி பாரதி என்ற தகவலோடு, வீரகேசரி இன்றுவரை பாரதியின் படைப்புகளுக்கு களமாக விளங்குகின்றமை பற்றியும், பாரதியின் மறைந்த தினத்தை தேசிய தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற சி.வி.வேலுப்பிள்ளையின் கருத்தும் அங்கம் 06  இல் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைச் செய்திகள்


14 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை!

இங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி

அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான  முறையான ஆதாரங்களை  கோத்தாபய  சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள்  குழு 

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான  வாராந்த விமான சேவை இன்று முதல் ஆரம்பம்

கடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை !

மன்னாரில் வாக்களித்துவிட்டு புத்தளம் நோக்கி பயணித்தவர்கள் மீது மதவாச்சியில் மீண்டும் தாக்குதல்

வாக்களிக்க செல்லக் கூடாது தமிழர்கள் மீது அச்சுறுத்தல்: காலி - நாகொடையில் சம்பவம்

13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ

இன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்!



14 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை!

12/11/2019 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

உலகச் செய்திகள்


இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- பங்களாதேசில் 15 பேர் பலி

 5 சத­வீத யுரே­னிய செறி­வாக்­கத்தை மேற்­கொண்­டுள்­ள­தாக ஈரான் அறி­விப்பு

 இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் படுகாயம்!

நீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்



இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- பங்களாதேசில் 15 பேர் பலி

12/11/2019 பங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிட்டங்கொங்கிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமும் தலைநகர் டாக்காவிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமும் பிரஹ்மன்பாரியா என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புகையிரதங்கள் நேருக்குநேர் மோதியமையினால் சிட்டங்கொங்கிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தின் மூன்று பெட்டிகள் முற்றாக சிதைவடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 20


இரு கோடுகள்


இரு தாரத்துடன் வாழ்க்கை நடத்தும் கதாநாயகனை அடிப்படையாக வைத்து ஏராளமான தமிழ்ப் படங்கள் வந்துள்ளன.  ஆனால் இரு தாரத்தில் ஒரு தாரம் அவனது மேலதிகாரியாகவும், அவளுக்கு கீழ் பணியாற்ற வேண்டிய ஊழியனாகவும் கதாநாயகனை சித்தரித்து உருவான முதல் படம்தான் இருகோடுகள்.


இயக்குனர் சிகரம் என்று பிற்காலத்தில் புகழ்பெற்ற கே. பாலசந்தர் 1969ல் கதை வசனம் எழுதிய இயக்கிய இரு கோடுகள் ரசிகர்களின் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெரிதும் பெற்றது.

ஒரு கோட்டை அழிக்காமல் அதை எவ்வாறு சிறிய கோடாக்குவது என்ற விடுகதைக்கு விடைதான் இரு கோடுகள்.  இந்தப் படத்திற்கான மூலக் கதையை ஜோசப் ஆனந்தன் எழுதியிருந்தார்.



மேடை நாடகமாக நடிக்கப்பட்டு வந்ததை கலாகேந்திரா திரை நிறுவனம் திரைப் படமாக தயாரித்தது.  படத்தை உருவாக்கும் பொறுப்பை பாலசந்தரிடம் விட்டது.  

காசிக்குப் போகும் கதாநாயகன் அங்குள்ள தமிழாசிரியரின் மகளை காதலித்து திருமணமும் செய்கிறான்.  திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவனின் தாய் தன் மகன் கலக்டராகப் போவதாக கூறி அவளை நிர்க்கதியாக்கி விடுகிறாள்.  இதை சவாலாக எடுக்கும் கதாநாயகியின் தமிழாசிரியரான தந்தை தன் மகளை படிக்க வைத்து கலக்டராக்குகிறார்.  கதாநாயகனோ கலக்டராக முடியாமல் கிளார்க் உத்தியோகத்தில் இணைந்து பணியாற்றுகிறான்.  மறுமணம் புரிந்த அவனுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.  அவன் பணிபுரியும் அலுவலகத்திற்கே அவனின் முதல் மனைவி கலக்டராக அவனின் உயரதிகாரியாக வருகிறாள்.  கதாநாயகன் என்ற கோடு அழியாமல் சிறிதாக அவன் மனைவி என்று கோடு பெரிதாக நிற்கிறது.  


இரண்டு மனைவிகளுடன் போராடும் பாத்திரத்திற்கு ஜெமினியை விட பொருத்தமானவர் யார் கிடைக்கப் போகிறார்கள்!  ஜெமினி கணேசன் இந்தக் கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருந்தார்.  முதல் மனைவியாகவும் கலக்டராகவும் வரும் சௌகார் ஜானகி பதவிக்குரிய மிடுக்குடனும் கணவனின் அன்புக்கு ஏங்கும் பரிதாபத்திற்குரியவராகவும் அருமையாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டார்.

பாலசந்தர் படம் என்றால் ஜெயந்தி இல்லாமலா! இதில் ஜெமினியின் இரண்டாம் தாரமாக வரும் ஜெயந்தி நடிப்பில் மிளிர்கின்றார்.  அவருடைய வேடத்தையும் நடிப்பையும் வெளிப்படுத்துவதில் பாலசந்தர் வெற்றி கண்டுள்ளார்.

தமிழ் சினிமா - சங்கத் தமிழன் திரை விமர்சனம்

விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத் தமிழனாக விஜய் சேதுபதி எப்படி கலக்கியுள்ளார். இதோ பார்ப்போம்,

கதைக்களம்

விஜய் சேதுபதி, சூரி சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது யதார்த்தமாக ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி பார்க்கின்றார்.
அங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது.
ஆனால் ராஷி கண்ணா அப்பா மிகப்பெரும் தொழிலதிபர், அவர் விஜய் சேதுபதியை பார்த்ததும் இவன் பெயர் முருகன் இல்லை, தமிழ் என டுவிஸ்ட் கொடுக்க, அதன் பிறகு தமிழ் யார், எதற்காக ராஷி கண்ணா அப்பா அஞ்சுகிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இதுநாள் வரை கதையின் நாயகனாக நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது கொஞ்சம் நாமும் மாஸ் காட்டலாம் என களத்தில் இறங்கியுள்ளார், முதலில் றெக்க பார்ம் அப் செய்து சங்கத்தமிழனில் முழு மாஸ் ஹீரோவாக களம் இறங்கிவிட்டார்.
அதிலும் உங்களை தட்டி கேட்க அவன் வருவாண்டா என்று சொன்னதும் ஷேடோவில் இருந்து ஹீரோ எண்ட் ரீ வருவது போல் புல் மாஸ் தான், அவரும் முடிந்த அளவிற்கு நன்றாக செய்துள்ளார்.
ராஷி கண்ணாவும் முதல் பாதியில் விஜய் சேதுபதியுடன் காதல் ஆட்டம் பாட்டம் என கலகலப்பூட்டுகிறார், அதை விட அவருக்கு டப்பிங் கொடுத்த ரவீனாவிற்கு தான் பாராட்டுக்கள்.
அட சூரி காமெடி தானா இது என கேட்கும் அளவிற்கு அனைவரையும் சிரிக்க வைக்கின்றார். அதற்கு முக்கிய காரணம் அவர் அடக்கி வாசித்து ரியாக்ஷனில் ஸ்கோர் செய்வது தான், அதை விட அந்த தொட்டிஜெயா காமெடி காட்சி சூப்பர்.
ஆனால், பிரச்சனையே கமர்ஷியல் படம் என்றாலே அதை தாங்க கூடிய சக்தி ரஜினி, விஜய், அஜித் அளவிற்கு இருக்க வேண்டும், இல்லையென்றால் அழுத்தமான கதை இருக்க வேண்டும். ஆனால், இதில் பல வருடம் பார்த்து பழகி போன கதை.
அதிலும் விவசாயம், கம்பெனி மூடுதல், மரம் நடுதல் போன்ற நல்ல விஷயங்கள் கூட சினிமாவில் காட்டி காட்டி அதுவே சில இடங்களில் படத்திற்கு மைனஸ் ஆகிவிடுகின்றது, அதை விட கத்தி படத்தை விஜய் சேதுபதி வெர்ஷனில் பார்த்த பீல்.
வில்லன் கதாபாத்திரம் தெலுங்கு, கன்னட நடிகர் என்பதால் அவர்கள் வரும் காட்சி ஏதோ டப்பிங் படம் பார்ப்பது போல் உள்ளது. அதிலும் இரண்டாம் பாதி எல்லாம் அட அடுத்த என்ன இது தானே என்ற ரேஞ்சில் தான் போகிறது.
படத்தின் ஒளிப்பதிவு கலர்புல், இசை விவேக் மெர்வின் சிறப்பாக செய்துள்ளனர்.

க்ளாப்ஸ்

விஜய் சேதுபதி சூரி காம்போ பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகிறது.
விஜய் சேதுபதி பல மாஸ் காட்சிகளில் முடிந்த அளவு நன்றாக நடித்து கொடுத்துள்ளார்.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

பல்ப்ஸ்

பார்த்து பார்த்து பழகி போன கதை மற்றும் திரைக்கதை.
மொத்தத்தில் சங்கத்தமிழன் லைட் கமர்ஷியல் ஓகே, ஹெவி கமர்ஷியல் மாஸ் படத்திற்கு கொஞ்சம் யோசியுங்கள் சேதுபதி.  நன்றி  CineUlagam