-->
தென்னிலங்கையில்
தோன்றிய அரசியல் கட்சிகள் பற்றி புதிதாக எதுவும் சொல்லவேண்டியதில்லை. அவற்றுக்கு நீண்ட
வரலாறு இருக்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதும்
தொடங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் நிறம் பச்சை. அதன் தேர்தல் சின்னம் யானை.
அதிலிருந்து
எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா பிரிந்துவந்து தொடக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்
நிறம் நீலம். அதன் தேர்தல் சின்னம் கை.
இவை இரண்டினதும்
தலைமைக்காரியாலயங்கள் கொழும்பில் மருதானை டார்லி ரோட்டிலும் (ஶ்ரீல.சு.கட்சி) கொள்ளுப்பிட்டியில்
காலி வீதியிலும் (ஐ.தே.க. ஶ்ரீகோத்தா) அமைந்துள்ளன.
லங்கா சமசமாஜக்கட்சியின் காரியாலயம் யூனியன் பிளேஸிலும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினது (மாஸ்கோ
சார்பு) பொரளை கொட்டாவீதியிலும் ( இன்று கலாநிதி என். எம். பெரேரா வீதி) அமைந்துள்ளன.
இவை இவ்விதமிருக்க,
ஶ்ரீல.சு.க.வுடன் பிரிந்து தனது மனைவி சந்திரிக்காவுடன் சேர்ந்து விஜயகுமாரணதுங்காவும்
மக்கள் கட்சி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை தொடக்கி, கொழும்பில் தெமட்டகொடையில் அதன்
காரியாலயத்தை அமைத்தார். அவர் கொல்லப்பட்ட பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களினால்
அவரது மக்கள் கட்சி மீண்டும் ஶ்ரீல.சு.கவுடன்
இணைந்துவிட்டது.
இந்தப்பின்னணிகளுடன்
மக்கள் விடுதலை முன்னணியை பார்த்தால் இந்தக்கட்சி முதலில் 1971 இல் ஆயும் ஏந்தி கிளர்ச்சி
செய்தமையால் தடைசெய்யப்பட்டு, மீண்டும் 1977 இல் பொது மன்னிப்பின் கீழ் அதன் தலைவர்கள்
விடுதலையாகி மீண்டும் பீனிக்ஸ் பறவையைப்போன்று எழுந்து பறந்து தங்களுக்கென ஒரு தனித்துவமான
அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டது.
இவர்களின்
பார்வையில் பச்சை, நீலக்கட்சிகள் முதலாளித்துவக்கட்சிகள் எனவும் சிவப்புக்கட்சிகளாக
விளங்கிய கம்யூனிஸ்ட், சமசமாஜக்கட்சிகள் சந்தர்ப்பவாதக்கட்சிகள் எனவும் சொல்லப்பட்டது.
இலங்கையிலிருக்கும்
அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் வரலாறு இருப்பதுபோன்று ஜே.வி.பி. என்ற மக்கள் விடுதலை
முன்னணிக்கும் சுமார் அரைநூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது.
1943 ஆம்
ஆண்டு தென்னிலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருக்கும் ரோகண விஜேவீரா குழந்தையாக
இருந்த சமயத்தில் அவரது தாயாரினால் மருத்துவத்தேவைகளுக்காக அப்பகுதியில் கிளினிக் நடத்திவந்த
டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்காவிடம்தான் அழைத்துச்செல்லப்பட்டவர்.
விக்கிரமசிங்கா
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( மாஸ்கோ சார்பு) தலைவராக இருந்தவர். மத்திய தர குடும்பத்தைச்சேர்ந்த
விஜேவீரா முதலில் குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராகவே இருந்தார். அதனால் ரஷ்யாவில் லுமும்பா
பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச்சென்று, அதனை பாதியில் நிறுத்திவிட்டுத்திரும்பி,
சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
அங்கும் அதிருப்தியுற்று தொழிலாளர்கள், விவசாயிகள், பாட்டாளிகள் மற்றும் வேலையில்லாத்திண்டாட்டத்தினால்
பாதிப்புற்றிருந்த பட்டதாரி இளைஞர்களை அணிதிரட்டிக்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி என்ற
இயக்கத்தை உருவாக்கி அவர்கள் மத்தியில் ஐந்து வகுப்புகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.