அவருக்கு வயது 80 இற்கும்
மேலிருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இயங்குபவர். அதிகாலையே எழுந்துவிடுவார்.
தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார்.
அரைமணி நேரம் தேகப்பயிற்சி செய்கிறார்.
தினமும் இரவில் ஒரு திரைப்படமும் பார்த்துவிடுவார். முக்கியமாக பழைய திரைப்படங்கள்! சிகரட், குடி என்று
எந்த தீய பழக்கங்களும் இல்லை. மனைவியும் ஊரில் போர்க்காலத்தில் சரியான மருத்துவ பராமரிப்பு இல்லாமல் மறைந்துவிட்டார். அரசாங்க ஊழியராக இருந்து ஓய்வுபெற்றவர். மச்சம் மாமிசம் புசிக்காத ஒரு தாவர பட்சிணி.
நிறைய
வாசிப்பவர். நான் வாழும் கங்காரு நாட்டுக்கு அவர் விருப்பமின்றி பிள்ளைகளின்
வற்புறுத்தலினால் வந்தவர். ஒரு பொது நிகழ்ச்சியில் கண்டு பேசியது முதல் எனது விருப்பத்திற்குரிய
அன்பர். அவ்வப்போது என்னுடன் தொலைபேசியில்
உரையாடுபவர். தனது கடந்த கால வாழ்க்கை, புகலிட வாழ்க்கை பற்றியெல்லாம் சுவாரஸ்யமான
செய்திகளைச்சொல்வார். அரசியல், சமூகம், கலை,
இலக்கியம், சமயம் , நவீன தொழில்நுட்பம், தலைமுறை இடைவெளி, புகலிடத்திலும் தாயகத்திலும்
ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றியெல்லாம் மனந்திறந்து உரையாடுவார். இணையங்களில் வரும்
எனது எழுத்துக்களையும் மற்றவர்களின் எழுத்துக்களையும் படித்துவிட்டு அவ்வப்போது அபிப்பிராயம் சொல்வார்.
அவர் பேசும்போது அநாவசியமாக குறுக்கிடுவதை கண்டிப்பார்.
தான் பேசி முடித்தபின்னர்தான் என்னை பேசுவதற்கு
அனுமதிப்பார். பொறுமை, சகிப்புத்தன்மை முதலான
இயல்புகளை அவரிடமிருந்தும் நான் கற்றிருக்கின்றேன். ஒரு நாள் காலை தொலைபேசியில் தொடர்புகொண்டு, " உம்மிடம் வரப்போகின்றேன்"
என்றார்.
" என்ன அய்யா திடீரென்று? அதற்கென்ன வாருங்கள்.
நான் இருப்பது தொலைவில். எப்படி வரப்போகிறீர்கள்?" எனக்கேட்டேன்.
" உமது இருப்பிடம், அங்கு எவ்வாறு வருவது?
எத்தனை மணிநேரப் பிரயாணம்? என்பதையெல்லாம் அறிந்துவிட்டேன். நீர் எப்பொழுது வீட்டில்
ஃபிரியாக இருப்பீர். ஒரு நாளைச்சொல்லும். ஆனால், அந்த நாளில் நீர் என்னுடன் மாத்திரம்தான்
நேரத்தை செலவிடவேண்டும். உம்முடன் பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. என்ன சொல்கிறீர்...?"
என்றார்.
அவரது வருகை எனக்கு விருப்பமானதுதான். ஆனால்,
அவர் விதித்த நிபந்தனை விநோதமாகப்பட்டது...! ஆசாமி வந்து நாள் முழுவதும் என்னை அறுத்து,
வறுத்து எடுக்கப்போகிறாரோ? என்ற தயக்கமும் வந்தது.
" அப்படி என்ன பேசப்போகிறீர்கள்? அடிக்கடி
தொலைபேசியில் பேசிக்கொண்டுதானே இருக்கிறீர்கள்! " எனக்கேட்டேன்.
" எல்லாம் நேரில் சொல்கிறேன். இன்னும் எவ்வளவு
காலத்திற்கு நான் இருப்பேன் என்பதை சொல்ல முடியாது. அதனால், உம்மிடம் சொல்வதற்கு ஒரு
சில விடயங்கள் இருக்கின்றன. அவற்றை தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க முடியாது. உம்மை
நேரில் சந்தித்து சில ஆவணங்களையும் காண்பித்து பேச வேண்டியிருக்கிறது. " என்றார்
அந்த அய்யா.