ஈழத்து
தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை
வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர்.
வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில்
1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார்.
சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல்,
மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர்.
வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும்
மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார்
சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப்பிரதியிலிருந்து
அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான்!
அழகு சுப்பிரமணியத்தினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் ( நீதிபதியின் மகன்), நாவல்
(மிஸ்டர் மூன்) ஆகியனவற்றை தமிழில்
மொழிபெயர்த்தார். இவரது காலச்சாளரம் சிறுகதைத்தொகுதிக்கும் நீதிபதியின் மகன்
மொழிபெயர்ப்பு நூலுக்கும் தேசிய சாகித்திய விருதுகள் கிடைத்துள்ளன.
கொழும்பில் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில்
இவர் பணியாற்றிய காலத்தில் சோவியத் நாடு, சோஷலிஸம் - தத்துவமும் நடைமுறையும், மற்றும்
புதிய உலகம், சக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியர்குழுவிலும் பணியாற்றி ஊடகவியலாளராக
தனது எழுத்துப்பணிகளைத்தொடர்ந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை
பாடநெறியிலும் பயிற்சி பெற்றிருந்த ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதைகள் ஆங்கிலம், ருஷ்யா
உக்ரேய்ன், சிங்களம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சர்வதேச
செயலாளராகவும் இயங்கியிருக்கும் ராஜஶ்ரீகாந்தன், கொழும்பில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன்
பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர். 2004 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி மறைந்தார்.
எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான ராஜஶ்ரீகாந்தன் மறைந்ததையடுத்து, ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் என்ற நூலை
எழுதி வெளியிட்டுள்ளேன்.
அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்து வந்தபின்னர், குறிப்பிட்ட
ஆண்டு முதல் அவர் மறைந்த 2004 ஏப்ரில் மாதம் வரையில் அவர் எனக்கு எழுதியிருக்கும்
கடிதங்கள் ஏராளம். அவை இலக்கியம், சமூகம், அரசியல், எழுத்துலகம் பற்றிய
செய்திகளையும் ஆவணப்படுத்தியிருக்கும். அழகிய சின்னச்சின்ன எழுத்துக்களில் அவரது
கடிதங்கள் அவரது எளிமையான இயல்புகளையும்
பேசியிருக்கும்.
1987 ஆம் ஆண்டில் அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில்
வடமராட்சியில் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவின்பேரில் இடம்பெற்ற
" ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பை பற்றி ராஜஶ்ரீகாந்தன்
எனக்கு எழுதிய இக்கடிதம் தெரிவிக்கும் செய்திகளிலிருந்து ஈழப்போராட்டத்தை முற்றாக நசுக்குவதற்காக 1987 இலேயே நடத்தப்பட்ட ஒத்திகையாகவும் அந்த "
ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பை
அவதானிக்கலாம்.
குறிப்பிட்ட " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பினையடுத்தே, இந்தியா
வடமராட்சியில் விமானங்கள் மூலம் உணவுப்பொட்டலங்களை வீசி மற்றும் ஒரு ஆக்கிரமிப்புக்கு
அடிகோலியது. அதன்பின்னர் அமைதி காக்க வந்த இந்தியப்படைகளின் காலம், அதன் பின்னரும்
நீடித்த போர்க்காலம், இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி தொடர்ச்சியாக ஆவணங்களும் நூல்களும் பத்தி எழுத்துக்களும்
வெளியாகின்றன.
ராஜஶ்ரீகாந்தன், கொழும்பிலிருந்து 14-07-1987 ஆம் திகதி எனக்கு எழுதிய இக்கடிதம் அன்றைய வடமராட்சி சம்பவங்களையும்
தொகுத்துச்சொல்கின்றது.
----------------------------------------------------------------------------------------
கொழும்பு
14-07-1987
எனதன்புப் பூபதிக்கு,
ஊரில் நடந்த சம்பவங்களை மிகச்சுருக்கமாக அறியத்தருகிறேன். நான் 14-04-87 ந் திகதி புதுவருடக்கொண்டாட்ட விடுமுறைக்குச்சென்று,
திரும்ப கொழும்பிற்கு வரமுடியாத நிலையேற்பட்டதால் இந்த கசப்பான அனுபவங்களை நேரிற் பெறும்
அனுபவம் கிட்டியது.