மேலும் சில பக்கங்கள்

இலங்கையில் பாரதி அங்கம் -- 20 - முருகபூபதி -

.


" இசை  வெறும்  உணர்ச்சியைத்தரக்கூடிய  போதையல்ல.  அது நலிந்துபோன  இதயத்திற்கு  நம்பிக்கையை  ஊட்டுகிறது. மனிதனின்  தத்துவார்த்த  வாழ்வை  வளப்படுத்தும்  வலிமை அதற்குண்டு.  எனவே  மனித நாகரீகத்தின்  செல்வமான இசையின்  உயிரை  அகற்றி, அதன் வெறும் சடலத்தை மாத்திரம் காட்டும்  நிலையை  இசையமைப்பாளர்கள்  கைவிடவேண்டும். மக்கள்  கவிஞன்  பாரதி  கூறியதைப்போலவே  இசையின் வாயிலாக  நவரசங்களை  பிரதிபலிக்கச்செய்யவேண்டும். அதைச்செய்யமுன்வரும்  இசையமைப்பாளர்களையும் மக்களையுமே  நான்  விரும்புகின்றேன்."
           இவ்வாறு  பாரதி நூற்றாண்டு காலகட்டத்தில் இலங்கை வந்திருந்த இந்திய  இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசன் ( மானாமதுரை பாலகிருஷ்ணன்  ஶ்ரீநிவாசன்) வீரகேசரி வாரவெளியீட்டிற்கு  ( 20-12-1981) வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
இவரை  பேட்டிகண்டவர் வீரகேசரி பத்திரிகையாளர் சுபாஷ் சந்திரபோஸ்.
யார் இந்த ஶ்ரீநிவாசன்...?
ஒரு   கால கட்டத்தில்  சென்னையில்  இடதுசாரி  கலை இலக்கியவாதிகள்   கூட்டாக  இணைந்து  தயாரித்து  வெளியிட்ட பாதை   தெரியுது  பார்  என்ற   திரைப்படத்தின்  இசையமைப்பாளர். இந்தப்படத்தில்   சில   காட்சிகளில்   ஜெயகாந்தனும்    வேண்டா வெறுப்பாக   தோன்றி  நடித்திருந்தார்.  எனினும்  படத்தின்  நீளம்  கருதி   அதனை  சுருக்கும்பொழுது  தான்  வரும்  காட்சிகளை ஜெயகாந்தன்   நீக்கச்சொன்னார்.

ஜெயகாந்தனின் அருமை நண்பரான எம்.பி.ஶ்ரீநிவாசன், தமிழ், மலையாளம், வங்காளம் உட்பட சில  இந்திய மொழிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட  திரைப்படங்களுக்கு  இசையமைத்திருப்பவர்.

ஜெயகாந்தனின் பாரிசுக்குப்போ  நாவலில் வரும் நாயகன் சாரங்கன் வேறு யாருமல்ல - அவர் இந்த ஶ்ரீநிவாசன்தான் என்று விடயம்  தெரிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ( வாசகர்கள் மீண்டும்  ஒரு  முறை பாரிசுக்குப்போ நாவலை படித்துப்பார்க்கலாம்)




 புதுவெள்ளம்   என்ற    சிவகுமார்   நடித்த படத்திற்கும்   இசையமைத்தவர்தான்  எம்.பி.ஶ்ரீநிவாசன்.    வெங்கட் சாமிநாதனின்    கதையான   அக்ரகாரத்தில்   கழுதை   என்ற   தரமான  படத்தில்  ஒரு  பேராசிரியராக  நடித்தவர்  ஸ்ரீநிவாசன்.   அடிப்படை    இந்துத்துவா   பழைமைவாதிகளும்  சநாதனவாதிகளும்   இந்தப்படத்தை   தடைசெய்வதற்கு  பெரும்  பிரயத்தனங்களில் ஈடுபட்டனர்.    எனினும்   அக்ரகாரத்தில்   கழுதை   விருதுகளை வென்றது.

ஸ்ரீநிவாசன்   இலங்கைக்கு  வருகைதந்தபொழுது  தமிழக  கல்வி   அமைச்சர் நாவலர்    நெடுஞ்செழியனும்   பாரதி  நூற்றாண்டு  விழாவுக்கு வந்திருந்தார்.    இவர்கள்    கலந்துகொண்ட    விழா   பம்பலப்பிட்டி சரஸ்வதி    மண்டபத்தில்    அமைச்சர்    இராஜதுரை   தலைமையில் நடந்தது.


அதற்கு முதல்நாள் வெள்ளியன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில்          ஈழத்தின்    பிரபல    நடன  நர்த்தகி   கார்த்திகா கணேசரின்    பாரதீய சங்கீதம் என்ற தொனியில்  பாரதி பாடல்கள் இடம்பெற்ற  கவிஞனின் கனவு        நாட்டிய   நாடகமும் அரங்கேறியது.    அதற்கு    இசையமைத்தவரும்    ஸ்ரீநிவாசன்தான்.

எம்.பி. எஸ். என்று   இந்திய  திரையுலகில்  பேசப்பட்ட  இவர் பெங்களுரில்   சுமார்  மூவாயிரம்  இளம்  பிள்ளைகளை   ஒரே சமயத்தில்  பாரதி  பாடல்களை   பாடவைத்து  அதற்கு  பின்னணி இசை   வழங்கி    சாதனை    புரிந்தவர்.

பாரதியிடத்தில்  அவருக்கிருந்த    ஆழ்ந்த  பற்றுதலும்கூட   இலங்கை அவரை அழைத்தமைக்கு காரணமாக அமையலாம்.
ஆனால்  - இதுபோன்ற  அழைப்புகள்  இன்றைய  சூழலில் சாத்தியமில்லை    என்பதும்    காலத்தின்   சோகமாகும்.

இறங்கச் சொன்னால்  முடவனுக்கு  கோபம், ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம்  என்ற துர்ப்பாக்கியமாகிவிட்டது இந்தியக்கலைஞர்கள்  இலங்கை வருவதுதொடர்பான சர்ச்சை.

இந்திய    இசையுலகின்  பெரிய   ஆளுமையான    ஸ்ரீநிவாசன்   1988 இல்   இலட்சத்தீவுக்கு   பயணம்    மேற்கொண்டபொழுது    அங்கு மரணமடைந்தார்.


தமது  இசைக்கு காப்புரிமை கோரும் இசைஞானி இளையராஜா - அவரது  இசையில் ஏராளமான பாடல்களைப்பாடிவிட்டு, இனிமேல் அந்த இசையில் பாடமாட்டேன் என்று அறிக்கை விடும்  எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விவகாரம் ஊடகங்களில் பேசப்படும் சமகாலத்தில், பாடல்களை இயற்றிய கவிஞர்களின் எழுத்துக்குரிய  பதிப்புரிமை -  காப்புரிமை  தொடர்பாக  எவரும்  மூச்சும் விடுவதில்லை.

அலைபாயுதே கண்ணா என்ற பிரசித்தி பெற்ற பாடலை இயற்றிய ஊத்துக்காடு வெங்கட சுப்பையா பற்றி  இயக்குநர் மணிரத்தினத்திற்கோ அந்தப்பாடலுக்காக ( அலைபாயுதே படம்) இசையமைத்த ஏ.ஆர்.ரஃமானுக்கோ  ஏதும்  தெரியுமா...?

தெரிந்திருந்தால் அந்தப்படத்தில் அந்தப்பாடல் இடம்பெற்றதற்காக, திரையில்  ( Title இல்) ஊத்துக்காடு வெங்கட சுப்பையாவின் பெயரைக் காண்பித்திருப்பார்கள்.   அலைபாயுதே கண்ணா  நாடுகள் கடந்து - தேசங்கள் எங்கும்  இன்றும் ஒலிக்கிறது.

தமிழ் உலகப்பிரசித்தி பெற்ற  சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடப்படுகின்றன. ஆனால், அந்தப்பாடல்களை தமது கற்பனைவளத்தினாலும்  எழுத்தாற்றலினாலும் கவித்துவச்சிந்தனைகளாலும்  இயற்றிய கவிஞர்கள் பற்றி ஒரு சொல்தன்னும்  பேசப்படுவதில்லை.

பாரதியாரின்  பாடல்களை தமிழகத்தில்  அரசுடைமையாக்கும் முன்னர்,  அதன் உரிமைகளைப்  பெற்றிருந்தவர் பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச்செட்டியார்.


பாரதி தமது காலத்தில் தனது கவிதைகளை நூலாக்குவதற்காக மிகவும்  சிரமப்பட்டார். நிதியுதவிகோரி   சீட்டுக்கவிகளும் அனுப்பினார்.  ஆனால், அவரது மறைவுக்குப்பின்னர் அவரது கவிதைகள், கட்டுரைகள் உட்பட பல ஆக்கங்கள் பல பதிப்புகளைக்கண்டு  இலட்சக்கணக்கில்  விற்கப்பட்டன. யாரிடம் இருக்கிறது  பதிப்புரிமை...? காப்புரிமை...?

இந்தப்பின்னணிகளிலிருந்து  பாரதியின் புகழைச்சொல்லிக்கொண்டே  பாரதியின் பாடல்களுக்கு, பாரதீய சங்கீதம் என்ற பொதுத்தலைப்புக்  கொடுத்து - பாரதியின் புகழை இந்தியாவில் பரப்பியவர் இசைமேதை எம். பி. ஶ்ரீநிவாசன்.  கேரள அரசின்  சிறந்த  இசையமைப்பாளருக்கான விருதை 1973, 78, 79, 81 ஆம்  ஆண்டுகளில் பெற்றிருப்பவர்.

1971 இல்  சென்னையில், Madras Youth Choir என்னும் அமைப்பை உருவாக்கி  சேர்ந்திசைக்குழுவில்  ஆறு  முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களை  நூற்றுக்கணக்கில் திரட்டி பாரதியின் பாடல்களுக்கு தமது  இசையால் உயிரூட்டிய எம். பி. ஶ்ரீநிவாசனின், இலங்கை வருகை  இந்த  இலங்கையில் பாரதி தொடரில் முக்கியத்துவமானது எனக்கருதுகின்றோம்.

" பாரதியாரின்  கனவுகளையும் குமுறல்களையும் உணர்ச்சிகளையும் மெய்மையாக  காட்டுவதற்கென அமைக்கவேண்டிய  இசையினை பாரதீய சங்கீதம்  என்போம். இது எமது சம்பிரதாய இசையின் அடித்தளத்தினின்றும் பாரதி பாடல்களின் தேவைகளுக்கும் ஏற்ப சிருஷ்டிக்க வேண்டியதொன்று.   இதற்கு இசை அமைப்பாளனின் உள்ளம்  பாரதியின்  உள்ளமாக முதலில் மாறவேண்டும். "   என்று  சொன்ன  எம். பி. ஶ்ரீநிவாசனை,   பாரதி இசைக்கு செய்யவேண்டிய பணியினை செய்து வெற்றி கண்டவர் என்று வீரகேசரி ( 13- 12-1981) புகழாரம்  சூட்டியிருக்கிறது.

பாரதியின்  பாடல்கள் பன்னெடுங்காலமாக எங்கும் ஒலிக்கின்றது.
இலங்கையில் தமிழ் விழாக்களில் பெரும்பாலும் தமிழ்த்தாய் வாழ்த்தாக " பாரதியின் வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி" தான் பாடப்படுகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும்  இந்தப் பழக்கம்  மரபாகவே தொடருகிறது. நடன அரங்குகளில், அரங்கேற்றங்களில், நாதஸ்வரக்கச்சேரிகளிலும் இசையரங்குகளிலும் மாணவர்களை  ஊக்குவிக்கும்  போட்டிகளிலும் பாரதி நீக்கமற நிறைந்திருக்கிறார்.

திரைப்படங்கள்,  இசைத்தட்டுக்கள், இறுவட்டுக்களில் மாத்திரமின்றி, கணினியில்  பார்க்க முடிந்த யூ ரியூப்புகளிலும் பாரதியின் பாடல்களை  கேட்கின்றோம்.

இந்திய தேசிய கீதம் ஜனகன மன இயற்றிய வங்கக்கவி ரவீந்திர நாத் தாகூரின் கவிதைகளை பாடுவதற்கென்றே தனிப்பாணியை அமைத்து  அதற்கு தாகூர் சங்கீதம் எனப்பெயர் சூட்டியிருப்பதுபோன்று, பாரதியின் கவிதைகளுக்கு  இசையமைத்து பாடல்  உருவமாக்கி பாரதி பாடல்கள்  என்ற சொற்பதம் பேசுபொருளாகியது.  அதற்கான  இசையமைப்பைப் பெற்றதும் பாரதீய சங்கீதம்  பேசுபொருளானது.

பாரதியார் கூட தமது கவிதையை இயற்றிவிட்டு பாடிப்பார்ப்பாராம்.
அவரது நண்பர்கள் கூடும் சபையிலும்  தான் எழுதிய கவிதைகளுக்கு  அவரே சந்தம்  அமைத்து  பாடுவாராம்.  பாரதியின் கவிதைகளில் ஓசைநயமும்  எளிமையும்  இருந்தமையால்  பலராலும் இசையமைக்க முடிந்திருக்கிறது.

இலங்கையிலும்  பல  இசைக்கலைஞர்கள்  பாரதியின்  கவிதைகளுக்கு   இசையமைத்து  உயிரூட்டினார்கள்.  அந்த இசையில் நாட்டிய  நாடகங்களும்  அரங்காற்றுகை  செய்தனர்.

பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கையில் பல பணிகளையும் பாடசாலைகள், இசை, நடனப்பள்ளிகள், இலக்கியச்சிற்றேடுகள். பத்திரிகைகள் உட்பட  இலங்கை  வானொலி ஊடகமும் முன்னெடுத்தன.

அந்த வகையில் இலங்கையின் பிரபல நடன நர்த்தகி கார்த்திகா கணேசர் பாரதீய சங்கீதத்தை முன்னெடுத்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

கார்த்திகா   ஏனைய  நடன  நர்த்தகிகளிடமிருந்து  வேறுபட்டிருப்பதற்கு  அவரிடமிருக்கும்  ஆற்றலும்,  தேடலும் மாத்திரம்    காரணம்  அல்ல.   நாட்டியக்கலை   தொடர்பாக  அவர் நீண்டகாலம்   ஆய்வுசெய்து  நூல்களும்  எழுதியிருக்கும் எழுத்தாளரும்    ஆவார்.   நடன  நர்த்தகியாக  மாத்திரமன்றி  தமது ஆய்வின்  வெளிப்பாடாக  நாட்டியக் கலாநிதியாகவும்  மிளிர்ந்தவர்.
அவர்  இதுவரையில்  தமிழர்  வளர்த்த  ஆடற்கலைகள்,  காலம் தோறும்  நாட்டியக்கலை,  இந்திய  நாட்டியத்தின்  திராவிட  மரபு, நாட்டியக்கடலில்   புதிய  அலைகள்  முதலான  நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.
நாட்டியக்கலைக்கு  கற்பனைத்திறனும்  அவசியமானது  என்பதை இலங்கையில்  தமது  முதல்  குருவான  இயல்,  இசை   வாருதி  ஸ்ரீ வீரமணி அய்யரிடம்   கற்றிருப்பவர்.    பரதநாட்டியக்கலையில்  பெருவிருட்சம் என்று   போற்றப்படும்  பத்மபூஷன் - நாட்டியகலாகேசரி  வழுவூர் இராமையா  பிள்ளையின்  வீட்டிலேயே  தங்கியிருந்து  பரதம் பயின்ற   பாக்கியசாலி.
                 வழுவூராரின்   மாணவிகள்தான்  கமலா  லக்ஷ்மணன்,  பத்மா சுப்பிரமணியம்,   சித்திரா  விஸ்வேஸ்வரன்,  வைஜயந்தி மாலா, பத்மினி, லலிதா,  ஈ.வி. சரோஜா,   எல். விஜயலட்சுமி,   ரமணதிலகம்  ( கவிஞர்  வாலியின்  மனைவி)  உட்பட  பலர்.   இவர்களில்   சிலர்  திரையுலகில்  நட்சத்திரமானார்கள்.
ஆனால்,  கார்த்திகா  ஆய்வாளராகவும்  எழுத்தாளராகவும்  மாறினார். இவரது   நூல்கள்   பரதம்  பயிலும்  மாணவர்களுக்கும்  பயிற்றுவிக்கும்   ஆசிரியர்களுக்கும்  பாட  நூல்களாக விளங்குகின்றன.
இன்று  நடனத்தில்  புதுமைகளையும்  பரீட்சார்த்த  முயற்சிகளையும் அறிமுகப்படுத்துபவர்கள்   பற்றிய  இவரது  பார்வை   இவ்வாறு அமைந்துள்ளது:-
 "  எமது  முன்னோர்கள்  காலாதி  காலமாக  வளர்த்த  கலை  எம்மை வந்தடைந்துள்ளது.  அதைக் காலத்திற்குக் காலம்  கலைஞர்கள் பழமையில்  இருந்து  புதுமை  படைத்த  வண்ணமே  உள்ளனர். புதுமையைப்படைக்கும்  கலைஞர்,  பழமையின்  படிமுறை வளர்ச்சியை    அறிந்தவராகவும்  இன்றைய  சமூக  சிந்தனை உள்ளவராகவும்   இருத்தல்  வேண்டும்.   இவர்களே  புதுமை   படைக்கும்   தகைமை   பெற்றவர்கள்."
அரங்காற்றுகை   என்பது  பலரதும்  உழைப்பில்  தங்கியிருப்பது. தன்முனைப்பு  அற்றது.   இதனை  நன்கு  புரிந்துகொண்டவர்  கார்த்திகா கணேசர்.

பாரதியின் பக்தர்களினால் உருப்பெற்ற  பாரதீய சங்கீதத்தை இந்தியாவில் பல அரங்குகளில் இளம் - மூத்த தலைமுறைக்கலைஞர்களின் ஒத்துழைப்புடன் அரங்காற்றுகை செய்த எம். பி. ஶ்ரீநிவாசனின் மனதில்  இருந்த நீண்ட நாள் கனவு  பாரதீய சங்கீதம்  ஆடல் வடிவில் அரங்கேற வேண்டும் என்பதுதான்.

அந்த இனிய கனவு நனவாகியது  இலங்கையில்தான் என்பது எமக்கும் பெருமைக்குரிய  நிகழ்வு.

பாரதியின் கனவுகளை தான் சார்ந்த நடனத்துறையின் ஊடாக ஆடலில் காண்பிக்கவேண்டும் என்ற நீண்ட நாள் கனவுடன் வாழ்ந்தவர்  நடன நர்த்தகி கார்த்திகா கணேசர்.

இரண்டு பெரிய ஆளுமைகளின் கனவுகளும் இலங்கையில்தான் சங்கமித்திருக்கிறது.

ஊடகங்கள் இந்த நிகழ்ச்சி பற்றி விதந்து பேசியிருக்கின்றன. பாரதீய இசையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வுகளுக்கும் குறிப்பிட்ட அரங்காற்றுகை  வித்திட்டது.

பாரதீய இசையின் ஊற்றுக்கண் பற்றிய தேடலில் ஈடுபட்டபோது, ஏறக்குறைய 87 வருடங்களுக்கு முன்னர், தமிழகக்கிராமங்களில் பாரதியின் கவிதைகளை ஒன்றுகூடி படித்து மகிழும் மக்கள் பற்றிய செய்தியை அறிந்துகொள்கின்றோம். அந்த மக்கள் குழுவில் பாரதியின் பாடல்களை எவ்வாறு பாடுவது எப்படி இசையமைப்பது முதலான வாதப்பிரதிவாதங்களும் எழும் என்று இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர்  எச். ஆர். கிருஷ்ணன் தாம் எழுதியிருக்கும் பாரதி யுகம் என்ற நூலில் பதிவுசெய்துள்ளார்.


(தொடரும்)

1 comment:

  1. இசையமைப்பாளர் மற்றும் பாரதியின் நேசர் அமர்திரு ஸ்ரீனிவாசன் அவரை பற்றிய குறிப்புகள் அருமையானவை யாருமே இதுவரை இந்த மேதையை பற்றி பேசவில்லை என்பது உண்மையில் வருத்தத்திற்கு உரியது. காப்புரிமை பற்றி நீங்க சொல்லியிருக்கும் கருத்து நெத்தியடி அந்த கால கவிஞர்கள் தங்கள் கவிதையின் வாயிலாக நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்து நல்ல சமுதாய விளைச்சலை எதிர்பார்த்தார்கள் ஆனால் இன்றைய கவிஞர்கள் காசை மட்டுமே குறிவைத்து விதைப்பதும் அறுப்பதுமாக இருக்கிறார்கள். உங்கள் மூலம் அமர்திரு ஸ்ரீனிவாசனை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி

    கார்த்திகா கணேசர் பாரதியின் பால் பெரும் மதிப்பு கொண்டவர் என்பது அவருடைய நாட்டிய நிகழ்ச்சியிலும் வானொலி நிகழ்ச்சியிலும் நன்கு அறியலாம். பாரதியின் பாடல்கள் இடம் பெறாத அவர் நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லாம். சமீக காலமாக தான் அவர் எனக்கு பழக்கம் ஆனால் அவர் கடந்து வந்த நடனபயணத்தில் பாரதியின் பாடல்களின் பங்கு எத்தனை என்பதை உங்கள் கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன். வாழ்க வளமுடன்

    ReplyDelete