மேலும் சில பக்கங்கள்

மே 06 ஆம் திகதி -மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் வாசிப்பு அனுபவப்பகிர்வு

.

மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் வாசிப்பு அனுபவப்பகிர்வு
          மொழிபெயர்ப்பு  அரங்கு - கருத்தரங்கு

அவுஸ்திரேலியத் தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் 17 ஆவது தமிழ் எழுத்தாளர்  விழாவில்  நாவல்,  மொழிபெயர்ப்புச்சிறுகதை, திறனாய்வு, கட்டுரை,  நேர்காணல்  முதலான  துறைகளில்  சமீபத்தில் வெளியான   நூல்களின் அறிமுகத்துடன் அவற்றின் மீதான வாசிப்பு  அனுபவப்பகிர்வும்  இடம்பெறவிருக்கிறது.
 எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மெல்பனில் Mulgrave  Stirling Theological  College Auditorium   மண்டபத்தில்   ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic - 3170) நடைபெறவுள்ள  இவ்விழாவில் நூல்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வு கலைஞரும் எழுத்தாளருமான திரு. மாவை நித்தியானந்தன் தலைமையில்  இடம்பெறும்.
அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் கடந்த காலங்களில் நடத்திய எழுத்தாளர் விழாக்களிலும், கலை - இலக்கிய நிகழ்வுகளிலும்  வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் அவ்வப்போது  சிறுகதை, கவிதை, நாவல் முதலான துறைகளிலும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை சங்கம் நடத்தியிருக்கிறது.  அவுஸ்திரேலியாவிலும் இலங்கை, இந்தியா, மற்றும் கனடா, ஐரோப்பிய நாடுகளிலும்  வதியும் எழுத்தாளர்களின் படைப்புகளும்  இந்நிகழ்ச்சிகளில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
படைப்பூக்கம்,  உள்ளடக்கம், கதை சொல்லும் பாங்கு, பாத்திர வார்ப்பு தொடர்பாக உள்வாங்கிக்கொண்ட அம்சங்களை பதிவுசெய்து,  தமது வாசிப்பு  அனுபவத்தை பகிர்ந்து  கேட்பவர்களையும் வாசிக்கத்தூண்டும்  வகையில் உரையாற்றுவிதமாக இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
தாம்  அண்மையில்  படித்த நூலின்  அறிமுகத்துடன் நேரக்கட்டுப்பாட்டையும் கவனித்து, வாசிப்பினால் பெற்ற அனுபவத்தை சொல்வதே இந்த அரங்கின் நோக்கமாகக்கருதப்படுகிறது.




நடைபெறவுள்ள 17 ஆவது எழுத்தாளர் விழாவில்  இடம்பெறவுள்ள வாசிப்பு அனுபவப்பகிர்வில்,   கனடாவில் வதியும் அ. முத்துலிங்கம் எழுதிய  கடவுள் தொடங்கிய இடம் நாவல் பற்றிய தமது வாசிப்பு அனுபவத்தை    திருமதி கலாதேவி பாலசண்முகன் சமர்ப்பிப்பார்.
அந்த வரிசையில் பின்வரும் நூல்களும் இடம்பெறுகின்றன.
சிட்னியில் வதியும் கீதா மதிவாணன் மொழிபெயர்த்த ஹென்றி லோசனின் என்றாவது ஒருநாள்   ( சிறுகதைகள்) நூலை முருகபூபதியும், டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி எழுதிய தமிழர் நாகரீகமும் பண்பாடும் நூலை திரு. பொன்னரசுவும்,  ஞானம் 200 ஆவது நேர்காணல் சிறப்பிதழை கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கரும்,  கொழும்பில் வதியும் ஞானம் பாலச்சந்திரன் எழுதியிருக்கும்    கவிச்சித்திரத்திரட்டு  ஆய்வு நூலை திருமதி மாலதி முருகபூபதியும் அறிமுகப்படுத்தி தமது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்வர்.


இவ்விழாவில்  இடம்பெறும்  மொழிபெயர்ப்பு அரங்கில் இலங்கையிலிருந்து வருகைதரும் படைப்பிலக்கியவாதியும், மொழிபெயர்ப்பாளரும் சில தமிழ் நூல்களை சிங்கள மொழிக்கு பெயர்த்திருப்பவருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தின " நல்லிணக்கமும் மொழிப்பரிவர்த்தனையும்" என்னும் தலைப்பில் உரையாற்றுவார்.
"அவுஸ்திரேலிய உரைபெயர்ப்புத்துறையில் இன்றைய நிலைமை " என்னும் தொனிப்பொருளில்  திரு. ந. சுந்தரேசனும், திரு. மொழிச்செல்வனும்  உரையாற்றுவர்.  
இலங்கையிலிருந்து வருகைதரும் ஞானம் கலை, இலக்கிய இதழின் ஆசிரியர் மருத்துவர் தி. ஞானசேகரன்  " ஈழத்து இலக்கியத்தின் இன்றைய நிலை" என்னும் தலைப்பில் உரைநிகழ்த்துவார்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியனின்  தொடக்கவுரையுடன் ஆரம்பமாகும் 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவை மெல்பனில் நீண்டகாலம் சமய, சமூகப்பணிகளில் ஈடுபட்டவரான மருத்துவர் அம்பலவாணர் பொன்னம்பலம், இந்தியத்தமிழ்க்கல்வி நிலையம் மற்றும்  வள்ளுவர் அறக்கட்டளை ஆகியனவற்றின் ஸ்தாபகர் திரு. 'நாகை' கா. சுகுமாறன், இலங்கையிலிருந்து வருகைதரும் எழுத்தாளர் திருமதி ஞானலட்சுமி ஞானசேகரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பர். செல்வன் ஹரிஷ் அழகேசனின் மெல்லிசையும் இடம்பெறும்.


நிகழ்ச்சி அறிவிப்பாளர் திருமதி உஷா சிவநாதன்.
எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகளில் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் துணைச்செயலாளர் திரு. இரகுபதி பாலஶ்ரீதரன் திருச்செந்தூரன் நன்றியுரையாற்றுவார்.
அண்மையில் வெளியான புதிய நூல்களையும் விழாவில் பெற்றுக்கொள்ளலாம்.
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மின்னஞ்சல்:      atlas25012016@gmail.com
இணையத்தளம்:         www.atlasonline.org

1 comment: