.
அரசியல்
அதிகாரம் என்பது மக்களின்
நலன்களுக்காகவே மக்களினால் தேர்தலில் தரப்படுகிறது. அத்தகைய ஜனநாயக உலகில் நாம்
வாழ்கின்றோம்.
சங்ககாலத்திலிருந்து புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரசியல்
பேசிவந்தவர்கள்தான். அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும் இவர்களில்,
சங்ககாலப் புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து பாடியே வாழ்க்கையை
ஓட்டினர்.
விதிவிலக்காக " மன்னவனும்
நீயோ வளநாடும் உனதோ..." என்று தமது தர்மாவேசத்தை கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான்
கம்பர் என்றும் சொல்லப்படுகிறது. வள்ளுவரும் இளங்கோவும் அவருக்குப் பின்னர் வந்த பாரதியும்
அரசியல், அறம் பற்றியெல்லாம் எழுதினார்கள்.
நவீனகாலத்து எழுத்தாளர்கள் அரசியல் பேசியதுடன் எழுதினார்கள், அரசியல்வாதிகளாக தேர்தல்களிலும் தோன்றினார்கள். அரசியல் தலைவர்களை நம்பி அவர்கள் பின்னாலும் சென்றார்கள்.
தமிழ்நாட்டில் காலத்தின்
இடி முழக்கம் என கொண்டாடப்பட்ட
ஜெயகாந்தனும் அரசியல் பேசினார்,
எழுதினார், ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களும் எழுதியவர். ஒரு கட்டத்தில் சென்னை தியாகராயர் நகர் சட்டமன்றத்
தொகுதியில் போட்டியிட்டு நாற்பதுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று, தமக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் அப்பழுக்கற்றவை என்றும் வசனம் பேசினார்.
மற்றுமொரு
எழுத்தாளர் பரீக்ஷா
ஞாநியும் ஆம் ஆத்மி
கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையும் அனுபவத்தையும் புத்திக்கொள்முதலாக்கினார்.
இலங்கையிலும் பல எழுத்தாளர்கள்
- ஊடகவியலாளர்கள் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில்
மூத்த நாவலாசிரியர் சுபைர் இளங்கீரன் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைத்தேர்தலில்
போட்டியிட்டவர்தான்.