.
இளைய பத்மநாதனின் "அற்றைத் திங்கள்"
பண்ணும் பரதமும் விரவிய நாடகக் கூத்து
எவ்வழி
நல்லவர் ஆடவர்
அவ்வழி
நல்லை வாழிய நிலனே
என்று,
நாட்டை வாழ்த்துகிறார் அவ்வையார்.
நல்ல மாந்தரது ஒழுக்கமே ஒரு நாட்டை உருவாக்கி உலக மேம்பாட்டிற்கு
வழி சமைக்கிறது. நல்ல அரசு அமைந்தால் நல்ல நாடு அமையும் - இது விதி.
ஒரு நல்ல அரசின் செல்வாக்கு ஏனைய அரசுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
உலகம் அதை இல்லாது ஒழிப்பதற்குச் சூழ்ச்சி செய்கிறது. ஒருவரோடு ஒருவர் எதிரிகளாக இருப்பவர்
கூட நல்லவரை அழிக்க ஒன்று சேர்ந்து விடுகிறார்கள் தனது மண்ணையும்
மக்களையும்,
மரம் செடி கொடிகளையும், நேசித்த
ஒருவனை பொறாமை வஞ்சகம் சூழ்ச்சியால் அழித்த கதையை "அற்றைத்
திங்கள்" அரங்காடலில் பார்க்கிறோம். வள்ளல் பாரியின் வரலாற்றை சமகால நிகழ்வுகளோடு
தொடர்வுபடுத்திக் காணலாம்.
கூத்து வித்தகர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் இலக்கியங்களிலே
காணப்படும் கதைகள்,
கருத்துகளை சமகாலச் சிந்தனைகளோடு பொருந்தும் வகையிலே நாடகக்
கூத்து வடிவங்களை மேடையேற்றுவதில் வல்லவர். இவை கண்ணுக்கும் காதுக்கும் மாத்திரமல்ல, கருத்துக்கும் விருந்தளிக்கின்றன, சிந்தனையைத் தூண்டுவன.
வள்ளல் பாரியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இவருடைய சிந்தனையிலே
புதிய வடிவம் பெறுகிறது. பரமற்றா ரிவர்சைட் அரங்கிலே, அக்டோபர்
26ம் நாள்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம், அவுஸ்திரேலியா,
ஆதரவிலே வள்ளல் பாரியின் வரலாறு அரங்காடல் கண்டது.
அற்றைத்
திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும்
உடையேம் எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத்
திங்கள் இவ்வெவண் நிலவின்
வென்றுஎறி
முரசின் வேந்தரெம்
குன்றும்
கொண்டார் யாம் எந்தையும் இலமே
என்னும் பாரிமகளிர் சோகப் பாடலைப் படித்தும் கேட்டும் இருக்கிறோம்.
அன்றைய நிலவுக்கும் இன்றைய நிலவுக்கும் இடையே என்ன நடந்தது?
இந்தச் சோக வரலாறு பண்ணும் பரதமும் விரவிய நாடகக் கூத்தாக, இளைய பத்மநாதனின் ஆக்கத்திலும் அண்ணாவியத்திலும் அரங்கிலே விரிகிறது. திரை விலகக்
காட்சி தொடங்குகிறது:
கருங்கல்
இருக்கையில் மன்னன் பாரி
புறங்காட்டி
அமர்ந்துள்ளான்,
அவன் முன்னிலையில் மகளிர் இருவரின் நடனம் ஆரம்பிக்கிறது,
பாடினியின் கணீரென்ற குரலிலே நாட்டு வளம் விரிகிறது
பின்னே
முல்லைக்கொடி படர்ந்த தேர்,
அதன் பெரிய
சில்லு தெரிகிறது,
பின் திரையிலே
மூங்கிலும்,
தினையும்,
பலாவும்,
செழித்து வளர்வது காட்சிப்படுத்தப்படக்
கூத்து களைகட்டத் தொடங்கி விட்டது.
"பேரழகு பெற்ற பறம்பு உயர் குறிஞ்சி நாடு", "வையகம் போற்றும் மலையே" என்ற அடிகளிலே நாட்டின் வளம் பாடினியின் இனிய குரலிலே
பெருமையுடன் ஒலிக்கிறது. பாணனின் பண்பட்ட இசையிலே பாரியின் கொடை வளம் விரிகிறது. மன்னன்
மகளிரை அணைத்து மகிழ்ந்து,
பாணரையும் பாடினியையும் கௌரவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்
அத்தருணத்தில் போர்ப்பறை ஒலிக்கிறது.
காட்சி மாறுகிறது:
போர்ப்பறையின் அதிர்வால் தோன்றும் பதைபதைப்பு, பரபரப்பு,
என மேடை அதிர்கிறது. வட்டுடையிலே பாரி போர்க்கோலம் கொண்டு நிற்கிறார்.
இணையா எதிரிகளான மூவேந்தரும் ஒரு நல்லவனை அழிக்க இணைகிறார்கள். யுத்த சன்னத்தராகப்
பாரியோடு போர்புரியும் காட்சியில் சிலம்பாட்டம், புலியாட்டம்
என ஆடல்கள் தொடர்கின்றன. தனியாக வீரச்சமர் புரிந்து பாரி போராடிய காட்சியின் போது, பின் திரையிலே தற்காலப் போரைக் காட்சிப்படுத்தியது பொருத்தமாக இருந்தது.
பாரி பற்றி அறியாதவர்கள் கூட ஒரு தனி மனிதனையும், அமைதியாக வாழ்ந்த அவனது மக்களையும், வளமான நாட்டையும், வஞ்சனையாலும்,
சூழ்ச்சியாலும் பூண்டோடு அழிக்கமுடியும் என சமகால வரலாற்றோடு
ஒப்பிட்டு விளங்கக் கூடியதாகக் காட்சியமைப்புத் தெளிவாக அமைந்திருந்தது. அதற்கேற்பப்
பாணரின் குரலிசையில் பாடல்களும் பக்கவாத்திய இசையும் அமைந்திருந்தன.
நகைவேழம்பர் ஆடிய வசைக் கூத்து, யுத்த களத்தை
வெளியில் இருந்து பார்த்து பாரியின் வீரத்தில் பெரும் நம்பிக்கை கொண்டவர்களின் மன நிலையைப்
பிரதிபலித்தது.
காட்சி மாறுகிறது:
பாரியின் கொடி வீழ்ந்து கிடக்க, மூவேந்தர்
கொடிகள் பட்டொளி வீசி நிற்க,
மகளிரை அணைத்தபடி பாடினி இருந்த நிலை அந்தச் சோகத்தைக் காட்ட, பாரியின் வீழ்ச்சி மெய்ப்பாடாகிறது. இங்கு மேடைக் காட்சி அமைப்பால் மட்டுமே ஒரு
பெரிய கருத்து உணர்த்தப்படுகிறது. மாபெரும்
சோகக் கதை ஒன்றை இதற்கு மேலால் உணர்த்த முடியுமா?
நீர்வார்
கண்ணேம் தொழுது நிற்கின்றேம்
பாடினியின் இசையிலும் பாணரின் இசையிலும் மயிர்க்கூச்செறியும்
பாடல் வரிகள் பார்வையாளர்களைக் கண்ணீர் சொரிய வைத்து விட்டன.
வீரம் விளைந்த
நிலம் வரலாறு கண்ட நிலம்
பேரரசுகள்
கூடிப் பெயர்தெறிந்தார் ஐயோ
யார்வந்து
காப்பார் என யாசிக்கும் நிலையோ
பாருளோர்
பார்த்திருங்கள் மீளும் வரலாறு
எத்தனை
சாவுகள் எத்தனை இழப்புகள்
அத்தனையும்
பொய்யோ பழங்கதையோ
எரியிது
எம்நெஞ்சத்து எரிமலை
எரிமலை
அடங்காது சத்தியம் வெடிக்கும்
தெரியிது
புகைமூட்டம் நெஞ்சத்தீ
பரவுது
பார் வரலாறும் விரையிது
நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் மிகவும் சுருக்கமாகவும், அதே வேளை செறிவாகவும் இக்கூத்து அரங்கேறியமை இதன் சிறப்பு. இக்கூத்தை எழுதி நெறிப்படத்திய
இளைய பத்மநாதன் அவர்களின் பல வருட அனுபவமும் கற்பனை வளமும் ஆற்றலும் ஆளுமையும், எழுத்திலும் இயக்கத்திலும் மாத்திரமல்ல நடிப்பிலும் மிளிர்வதைப் பார்க்கமுடிகிறது.
நகைவேழம்பராக ஸ்ரீபைரவியுடன் இணைந்து, இளமைத் தோற்றமும் வயோதிபத்
தோற்றமுமாக ஆளுக்கு இரு முகமூடிகள் என முன்னும் பின்னும் அணிந்து ஆடிய காட்சி பார்வையாளர்களை
வியப்பிலாழ்த்தி விட்டது. ஸ்ரீபைரவியின் குரல் வளம் காட்சிக்கு மெருகேற்றியது.
எமது இலக்கியங்களிலே விளக்கம் பெறும் எழினிகளின் பயன்பாட்டை
இங்கும் காணலாம். யுத்த முடிவில் செந்திரை விழுகிறது. அத்திரைக்கு அடியால் மறைந்து, புகுந்து,
தவழ்ந்து யுத்த களத்திற்கு வருவதில் கரந்துவரல் எழினி விளக்கம்
பெறுகிறது.
அனுபவம் ஆற்றலும் மிக்க நடன ஆசிரியை பத்மரஞ்சினி உமாசங்கர் அவர்களின்
நடன அமைப்பாண்மையும்,
அவரின் மாணவியர் கஜானி, நந்தினி
ஆகியோரின் நடனமும் கூத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றன. நடனத்திற்கு மெருகேற்றியது
பாடினியாக வந்த யதுகிரியின் இனிமையான குரல். நட்டுவாங்கம் செய்தவர்களும் பக்கவாத்தியம்
வழங்கியவர்களும் கூத்தின் தரத்தை மேலும் உயர்த்திவிட்டார்கள். பாணராக வந்த பாவலனின்
இசை ஞானம்,
குரல்வளம் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இளைய பத்மநாதனின்
கவிதை வரிகள் பாவலனின் இசையில் புதிய பரிமாணத்தைப் பெற்றன.
நடனக் காட்சியில் சுபதாசன் பாரியாகவும், போர்க்களக் காட்சியில் மனோகரன் பாரியாகவும் வந்தார்கள். ஒப்பனை கருதியே அப்படி
ஒரு தேவை என்று அறிந்தோம். முகமூடிகளைப் பயன்படுத்தியமையும் அரங்கச் செயற்பாட்டிற்குப்
புதுமையாக இருந்தது. பாரி மன்னன் போர்க் கோலத்தில், வட்டுடை, கிரீடம்,
தோள் பட்டை, மார்புக் கவசம் ஆகியவற்றுடன்
தோன்றி கூத்துக்கு அடையாளம் தந்தார். அவரின் ஆடல் அசைவுகளுக்கு உடை தடையாக இருந்தனவோ
என்று எண்ணத் தோன்றியது. அவர் சிலம்பாட்டத்தில் வல்லவர். பொருநராகக் கொடிதாங்கி வந்த
மூவரும் தாளத்திற்குக் கூத்து மிதி போட்டார்கள்.
நாடகத்தில் இன்னொரு நாடகம் பின் திரையில் விரிந்தது. அதன் ஆக்குனர்
சஞ்சயன் பாராட்டுக்கு உரியவர். அவரின் தொழில் நுட்பம் கூத்தை இன்னொரு தளத்திற்குக்
கொண்டு சென்றது.
அற்றைத்
திங்கள் அவ்வெண்ணிலவில்
பாடலோடு நாடகம் முடியும்போது வானிலே முழுநிலா தோன்றியது அழுத
கண்களுக்கு ஆறுதலாக இருந்தது.
"இயல் இசை நாடகம் (நடனம்) ஆகிய முத்தமிழ் வல்லார்கள், மற்றும்
பல் ஊடகத் தொழில் நுட்ப வல்லார் ஆகியோரின் கூட்டு முயற்சி இது", என இளைய பத்மநாதன் கூறுகிறார்.
இது முதல் அரங்காடல். புலம் பெயர் நாடுகளில் இப்படியான பரீட்சார்த்த
அரங்காடல்கள் ஒரு தடவை மேடை ஏறுவதோடு நின்றுவிடாமல், மேலும்
பல தடவைகள் நிகழ்த்தப்படும் போது மெருகேற்றப்பட்டு சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பாரி மன்னனின் புகழ்போல்,
"அற்றைத்திங்கள்" நாடகக் கூத்தும் “கடல் தாண்டிக் காலம் கடக்கும்".
-
பராசக்தி சுந்தரலிங்கம்.
மிக உயர்வான தரத்துடன் எழுதப்பட்டுள்ளது. நிறைந்த ஆய்வின் பின் புலம் எழுத்தில் மிளிர்கிறது.
ReplyDeleteசந்திரிகா
“அற்றைத்திங் கள்”எனுமோர் அருங்கூத் திற்கு
ReplyDeleteஅமுதனைய செஞ்சொல்லால் அற்புத விமர்சனம்!
இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டாண் டாக
இறவாது நிலைத்திருக்கும் இலக்கிய நிகழ்வூடன்
நற்றமிழர் விடுதலைப்போர் நசுக்கிய எதிரியின்
நாசவேலை அழிவூகளொடு ஒப்பிட்ட கூத்தைப்
பொற்புடனே விமர்சித்த பராசத்தி அவரின்
புனிதங்கமழ் எழுத்துப்பணி என்றும் தொடர்கவே!
பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.
பாவலன் பாராட்டுக்குரியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை சங்ககால புலவர் போலவே உருவமும் குரலும் இருந்தது. பாடினியாக வந்த பெண்ணும் நன்றாகவே செய்திருந்தார் இளையபத்மநாதன் கலைஞன் என்பது நாம் அறிந்தவிடயம் அதை மீண்டும் காட்டியிருக்கிறார் பின்திரையில் காட்டிய தொழில் நுட்பம் காட்டாமல் விடப்பட்டிருந்தால் கூத்தின் தரம் வானுயர சென்றிருக்கும்.எழுதிய பராசக்தியும் பாராட்டுக்குரியவர்.
ReplyDeleteகமலா
வுணக்கம்; அம்மா
ReplyDeleteஅருமையான விமரிசனம். இப்படி எழுதுவதற்குத் தகுதி உங்களுக்குத்தான் உண்டு. அதுவே அந்தக் கலைக்கும் நெறிப்படித்திய தனித்துவமான அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்களின் வித்துவத்துக்கும்ää பங்குபற்றிய கலைஞர்களுக்கும் பெருமை. கூத்தைப் பார்ப்பதற்கு நான அவுஸ்திரேலியாவில் இருக்கவில்லை. 7ம் திகதிதான் திரும்பினேன். இதைப் பார்த்தவுடன் பெரு மகிழ்ச்சியடைந்தேன். முன்னரே அண்ணாவியாருடைய ஆற்றலும் பாரிகதையும் எனக்குத் தெரியும். உங்களுடைய விளக்கமான வர்னனையை வாதித்தபோது கூத்தை நேரிலே பார்த்ததுபோல் இருந்தது. சமகால ஒப்பீட்டைக் குறிப்பிட்போது நெஞ்சை அள்ளியது. இளையபத்மநாதனுடைய ஆக்கம் என்றால் அதில் உட்செறிவு இல்லமல் இருக்குமா என்று எண்ணினேன். உங்களுடைய இந்த அரும் தொண்டுக்கு எனது நன்றிறும் பாராட்டும் உரித்தாகுக. இதனைத் தமிழ்முரரில் ஒலிக்க எனது கணணி வித்தகம் உயவில்லை. எனவே நேரடியாக எழுதுகிறேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல் “அற்றைத் திங்கள்” மீண்டும் பல முறை அரங்கேற வேண்டும். அப்போது தவறவிடமாட்டேன்.
Na.Mahesan
அருமையான விமர்சனம். இதை வாசிக்கும் போதே எழுதியவர் நாடக கலையின் நுணுக்கங்களை நன்கறிந்தவர் என்பதும் தன் எண்ணங்களையும் கருத்துக்களையும் சொல் வடிவில் படம் பிடித்து காட்ட வல்லவர் என்பது புலனாகிறது. இப்படியான ஒரு விமர்சனத்தை பத்திரிகையில் எழுதி இக்கூத்தின் சிறப்பை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நான் இளைய பத்மநாதனிடம் கூறினேன். அவர் "நான் யாருக்கும் எழுத சொல்லி சொல்லமாட்டேன். யாரும் எழுதட்டும்" பார்க்கலாம் என்றார். இதே நாடகத்தை திரும்பவும் மேடையேற்றும் நோக்கம் உண்டென்றும் தெரிவுத்துள்ளார். இவ் விமர்சனத்தில் கூறப்பட்டவைகளை நானும் வழிமொழிகிறேன். எல்லோரும் சிறப்பாக செய்திருந்தாலும் ,இந் நாடகத்தின் தரத்தை உயர்த்திய பெருமை யதுகிரியையும் பாவலனையுமே சாரும் என்று சொன்னால் மிகையாகாது. - தேவராஜன்
ReplyDelete