மேலும் சில பக்கங்கள்

சிட்னி முருகன் கோவிலில் நாதஸ்வர கச்சேரி 09-04-2012

.
         நாட்டிய கலாநிதி - கார்த்திகா கணேசர்
 படபிடிப்பு ஞானி

ஏப்ரல் 9 ஆம் நாள் 2012 நடக்க இருக்கும் நாதஸ்வர கச்சேரிக்கு வாருங்கோ, நீங்கள் தான் கலைஞரை அறிமுகப் படுத்த வேண்டும் என கூறினார் தனிக்குமார். நாதஸ்வர தவில் கலைஞரை அறிமுகப் படுத்துவதா? அவர்களை ஏன் அறிமுகப் படுத்த வேண்டும்? திருவிழாவிலே முருகனுக்கு அடுத்த படியாக மக்களை கவர்ந்தவர்கள் அவர்கள். அவர்களை ஏன் அறிமுகப் படுத்த வேண்டும் என்றேன். இது எல்லாம் சம்பிரதாயம், கட்டாயம் வாங்கோ ஏன் வற்புறுத்தினார். கலாசார மண்டபத்தில் கலைஞரைக் கண்டேன். மிகுந்த மரியாதையுடன் இப்படி ஒரு சம்பிரதாயமாம். அதனால் தான் உங்களை அறிமுகப்படுத்த வேண்டும். உங்களைப் பற்றி கூறுங்கள் என்றேன். 





நாதஸ்வர வித்தகர் கலாபூசணம் S S சிதம்பரநாதன் மாவிட்டபுரம் K S ராஜாவின் மகன். நாதஸ்வரக் கலையிலும் தந்தையின் தனயன், N P நாகேந்திரன் அருகில் வந்தார். தந்தை பஞ்சாப கேசன், தந்தைக்கு அடுத்து தமிழகத்திலே திருசேற மூர்த்தியிடம் சீட்சை.சிதம்பர நாதன், நாகேந்திரன் இருவரும் தமிழகத்தில் சேர்ந்தே குருகுல வாசம் செய்தவர்கள். பஞ்சாப கேசனின் பிள்ளையா? பிறகு எதற்கு அறிமுகம்? அது ஒன்றே போதாதா? நீங்கள் யார் என கூற.  யாழ் இந்துக்கள் பஞ்சாபகேசனை அறியாமல் இருக்க முடியாது. அடுத்து தவில் வித்தகர்கள் N R S சுதாகர் சின்னராசாவின் மகன் R தர்சீலன் வட்டுக்கோட்டை ராமநாதன் மகன் நான் சிறுவயதாக இருந்து வரும் வரை கோயில்களிலே இவர்கள் கச்சேரி என்றால், அன்று பக்தர் பரவசம்  கோயில் கொண்ட மூர்த்தியிடம் இருந்து இவர்கள் பக்கம் திரும்பிவிடும். ஊர் பூராவும் இன்று பஞ்சாபி கேசன் நாதஸ்வரம், அவன் சின்னராசா என்ன அடி அடிக்கிறான் என்பதே பேச்சு. ஆறு வயதிலே இப்படி பெரியவர் பேசுவதை கேட்டு வளர்ந்தவள் நான். கோயில் வாசலிலே சமா பெரிய கூட்டமே கூடி விடும். சர்வ அலங்கார பூபதிகளாக இந்த கலைஞர் 



வந்து அமர்வார்கள். அச்சார கூட்டுடன் கூடிய தங்க சங்கிலிகள், நாதஸ்வரத்தில் தவழும் விரல்களில் ஜொலிக்கும் மோதிரம். இருமருங்கிலும் தவில் வித்துவான்கள் அவர்கள் கழுத்து செயின் ஜொலிக்கும். மேளம் கூட்டுவார்கள் பின் பிப்பீ நாதஸ்வரம் சுருதி சேர்ப்பார்கள்.

பின்பென்ன இரவிரவாக இசை மழை தொடங்கி ஆறேன பிரவகித்து கம்பீரமாக ஓடும். தாளம் போட்டு இரசிப்போர் தலை அசைப்போர் நாதஸ்வர நாதம் 2 மயில் வரை ஒலிக்கும். கோயிலுக்கு வராதவரும் வீட்டில்லிருந்து ரசிக்கலாம். மறுநாள்    அதை பற்றி பேச்சு யார் வாசிப்பு திறம் என சந்தியே அதிர விமர்சனம். சர்ச்சை




வளர்ந்துவிட்டால் பொம்பிளை பிள்ளை கோயில் வாசல் உட்கார்ந்து நாதஸ்வரம் கேட்டக கூடாது. கோயில் வாசலுக்குதான் போய் கேட்க முடியாது. ஆனால் நாதஸ்வர கச்சேரி கேட்க நிலா வெளியில் வைக்கல் கும்பியின் மேல் ஏறி அமர்ந்து பெரிய அக்காக்களுடன் அமர்ந்து நாதஸ்வர இசையை இரசித்தேன். கண்ணன் குழல்லிசையில் கன்னி பெண்கள் மயங்கினார்களாம். ஆனால் கன்னிகளான எம்மை தம் நாதஸ்வர தவில் இசையில் மயங்கியவர் இந்த இசை மேதைகளே.

படித்தவன் முதல் பாமரன் வரை நாதஸ்வர தவில் கச்சேரிக்கு அடிமை. M S ஐ G N B யை அறியார். ஏன் பால முரளியையும் தெரியாது, ஆனால் பஞ்சாபிகேசன், பத்மநாதன் சின்ன ராசா இவர்கள் எல்லாம் தான் மக்களிடம் கர்நாடக சங்கீதத்தை எடுத்து சென்றவர்கள்.




திருமணமாக கொழும்பு வாழ்க்கை வெள்ளவத்தையிலே பிள்ளையார் கோயில் வேல் விழா தென்னகத்தில் இருந்துவரும் நாதஸ்வர கலைஞர்கள் மண்டபம் நிறைந்த கூட்டம். மதத்தால் முஸ்லிம் ஆன சின்ன மௌலானா சுவாமி ஊர்வலத்தில் வாசித்தார். ஆந்திர தேசத்திலே முஸ்லிம் மத நாதஸ்வர வித்துவான்களும் உண்டு. இவர்களும் பரம்பரை கலைஞரே. இவர் ஒரு மாபெரும் நாதஸ்வர கலைஞர். 

ஏன் தந்தையார் திருவாவடு துறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர கச்சேரி கேட்டதாக பெருமையாக சொல்வார். இவர் நாதஸ்வர உலகில் கொடிகட்டி பறந்த நாதஸ்வர சக்கரவர்த்தி. கச்சேரி முடிந்து அவர் வரினம் ரயில் அவர் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு முன்பாகவே, அவர் வீட்டுக்கு எதிரே வரும் போது அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு அபராதத்தை அவர் ஆள்கட்ட ராசரத்தினம் மகா சக்கரவர்த்தி போல இறங்கி நடந்து போவார். அன்றைய இரசிகர் இதையும் இரசித்தார்கள்.

S S வாசன் மகள் திருமணத்திற்கு திருவாவடு துறை ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர கச்சேரி ஏற்பாடு செய்தார். ராஜரத்தினமோ என் சொந்த காரில் தான் வருவேன், ஆனால் அந்த கார் சென்னையில் T V S கார் கம்பெனியில் உண்டு என கூறினார். S S வாசன் 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து காரை வாங்கி திருவாவடு துறைக்கு அனுப்பி வைத்தார். இது கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதியது. இது நடந்தது 40 களில்.





திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை மைசூர் மகாராஜா தம்முடைய ஆஸ்தான வித்துவானாக நியமித்துக்கொள்ள விரும்பினார். ஆனால் ராஜரத்தினம் பிள்ளை விரும்பவில்லை. அதற்கு நாதஸ்வர வித்துவான் என்ன காரணம் சொன்னார் தெரியுமா? மைசூருக்கு அவர் வெறும் மகாராஜா, நாதஸ்வரத்திற்கு நான் சக்கரவர்த்தி அல்லவா? சாதாரண ராஜா யானை மேல் பவனி வரும் போது அவருக்கு முன்னால் திருவாவடுதுறை ஆதீன வித்துவானும், நாதஸ்வர சக்கரவர்த்தியான நான் நடந்து கொண்டு வாசிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்றாராம். 

நான் நாட்டியம் கற்ற காலத்திலே பெயர் பெற்ற நாதஸ்வர வித்துவான் வீரு சாமிப் பிள்ளை எனது குருநாதர் வழுவூர் ராமையாபிள்ளை வீட்டில் வந்து தங்குவது வழமை. ஒருநாள் ஏதோ எனது ஆசிரியர் வேண்டுதலுக்காக வீருசாமிப் பிள்ளை நாதஸ்வரத்தை வாசிக்க ஆரம்பித்தார். 4 மணிநேரம் அந்த ஆனந்த இசையில் மூழ்கியவர்  பலர் தெருவாசலில் கூட்டம் கூடிவிட்டது. பின்பு யாவரும் வந்து அமர்ந்தார்கள். இதே வீருசாமி பிள்ளைதான் திருப்பதி தேவஸ்தான வித்துவான். ஒரு முறை இந்திய ஜனாதிபதி மாளிகையில் வாசித்தார். அன்றைய ரஷ்டபதி சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன் தனது மற்றைய வேலைகளை ஒத்தி போட்டு விட்டு கச்சேரியில் அமர்ந்து விட்டாராம். இதே விருசாமி பிள்ளை தனது கடைசி கச்சேரியை கிருஷ்ண காண சபாவில் வாசித்தார். நடக்க முடியாமல் கைத்தாங்கலாக அழைத்து வந்து விட்டாராம். விமர்சகர் என். எம் .என் எழுதி இருந்தார் எப்படி கச்சேரி வாசிப்பார் என பயந்தேன். நாதஸ்வரத்தை எடுத்ததும் கம்பீர நாதம்  எல்லோரையும் ஆட்கொண்டிருந்தது என எழுதியிருந்தார்கள். என் வாழ்வில் நான் அறிந்து அனுபவித்து வாழ்ந்த நாதஸ்வர இசை பற்றி உங்களுடன் பகிர்ந்தேன். 

நாதஸ்வரம் தவில் தேவகானம் எம்மை இறையுடன் இணைக்கும் உன்னத வாத்தியம். அந்த வாத்தியம் இன்றுவரை குடும்ப சொத்து. அவர்கள் பாரம்பரிய கலை அதை வாசிக்க அசாத்திய சக்தியும் ஞானமும் வேண்டும் அதனால் இதை அசுர வாத்தியம் என கூறுவதும் உண்டு. இதை கையாள அசுர சக்தியும் அசுர சாதகம் (பயிற்சியும்) வேண்டும். இந்த அற்புத கலைக்கு நாமெல்லாம் ரசிகர்தான். புலம் பெயர்த்த நாடுகளில் கோயில்களும் திருவிழாக்களும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகின்றது அதனால் இந்த தேவ நாதமும் அதன் தேவையும் பெருகுகிறது. தமிழரின் தனிப்பெரும் வாத்தியம் என்றும் எங்கும் ஒளித்துக்கொண்டு  இருக்கும். நாதஸ்வர தவில் கானம் வழங்கிய கலாபூஷணம் எஸ். எஸ் சிதம்பரநாதன், நாதஸ்வர இன்னிசை வேந்தன் என் பி நாகேந்திரன், தவில் இளவரசன் என் ஆர் எஸ் சுதாகர், தவில் சுடர் ஒளி ஆர் தர்சிலன் அவர்களின் தேவ கானத்தில் எம்மை இழந்தோம். சிட்னி வைகாசி குன்றன் பாலசுப்ரமணியன் அருளால் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்து தேவ கானத்தை இசைக்க வேண்டும் என வேண்டி எல்லாம் வல்ல முருகப்பெருமான் தாழ் பணிகிறேன். 



3 comments:

  1. கவனத்தில் கொள்க :

    "நாதஸ்வர வித்தகர் கலாபூசணம்S S சிதம்பரநாதன் மாவிட்டபுரம் K S ராஜாவின் மகன்". என்பது தவறு

    நாதஸ்வர வித்தகர் கலாபூசணம் S சிதம்பரநாதன் அளவெட்டி தவில் வித்வான் S செல்லத்துரை யின் மகன்.

    ReplyDelete
  2. யாழ் இந்துக்கள் பஞ்சாபகேசனை அறியாமல் இருக்க முடியாது.
    -------------------------------

    யாழ் இந்துக்கள் அல்ல. யாழ் சைவ சமயத்தினர். சிட்னி முருகனில் இருப்பது சைவமன்றம். இந்து மன்றமல்ல.

    ReplyDelete
  3. சைவம் - சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
    வைணவம் - விஷ்ணுவையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயப் பிரிவு.
    சாக்தம் - சக்தியை வணங்கும் சமயப் பிரிவு.
    கௌமாரம் - முருகனை வணங்கும் சமயப் பிரிவு (குமரனை வணங்குவது கௌமாரம்).
    சௌரம் - சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
    காணபத்தியம் - விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.

    இவர்கள் எல்லோரையும் வணங்குபவர்கள் இந்துக்கள். யாழ்ப்பாணத்தவர்கள் இந்துக்களே!

    சைவமன்றம், சைவவேளாளர் என்ற சொற்பதங்களுக்கு மேலதிக விளக்கம் தேவை.

    ReplyDelete