மேலும் சில பக்கங்கள்

வன்னி நிலம் கண்ணீர் வடிக்கிறது. செ.பாஸ்கரன்

.

வன்னிநிலமெங்கும் வாழ்விழந்த பெண்கள்
தேச மீட்பிற்காய் தேடிப்பிடித்ததினால்
பக்குவப் பட்டதும் படாததுமாய்
அவசரக் கல்யாணம்
குழந்தைகளே குழந்தைக்கு தாயான பெரும் துயரம்
காலிழந்து கையிழந்து கட்டியவன்தனை இழந்து
வாழ்க்கை வெறுமையிலே வாழுகின்ற பரிதாபம்
யார் எவரைத் தேற்றுவது.
சோகக் கதைகேட்டால் சொட்டுகின்ற கண்ணீரில்
வன்னி நிலம் நனைகிறது


போர் பேசிச்சென்ற வார்த்தைகளால் 
ஊனம் உடலில் மட்டுமல்ல மனதிலும் தொற்றிக்கொண்டது
ஊரோச்ச வாழ்ந்த இனம் உதவிக்காய்
கைநீட்டி வாழ்கிறது
காடளித்து களனி செய்து கவிதையென வாழ்ந்தவர்கள்
கால்வயிற்றுக் கஞ்சிக்காய் கையேந்தும் பரிதாபம்
நாதியற்றுக் கிடப்பவரை நாம் நிமிர்ந்து பார்க்கவில்லை
எங்கள் விழிகளிலே அவர்களுக்காய்
சிறு துளிகள் சிந்தட்டும்
அவர் துயரை எம்கரங்கள் அன்போடு துடைக்கட்டும்
உறவுகள் நாமென்று உரத்துக் குரல் கொடுப்போம்.

3 comments:

  1. குரல் கொடுக்க பலருண்டு
    குறை சொல்ல பலருண்டு
    கரம் கொடுக்க யாரென்று
    காத்திராமல்
    நாமுள்ளோம் நாமுள்ளோம் என
    கரம் கொடுப்ப்போம் முரசொலியே

    ReplyDelete
  2. ஊர் கூடி தேரிழுத்த எம் தேசம்
    உணவுக்காய் அலைவதையும் பார்ப்பதுவோ
    உறவாக நாமிருந்தும் என்னபயன்
    உடனடியாய் உதவிகளை செய்வோம் இன்றே

    கௌரி சேகர்

    ReplyDelete
  3. ஓமக்கா ( அக்காவோ தங்கையோ தெரியாது ) பாட்டில சொன்னா போதாது பாத்து ஏதாவது செய்யவேணும்

    ReplyDelete